சாதிச்சுட்டடா தம்பி.. இந்திய வீரரை அங்கீகரித்த பயிற்சியாளர்!!

By karthikeyan VFirst Published Jan 7, 2019, 3:41 PM IST
Highlights

தன்னை அணியில் எடுத்ததை நியாயப்படுத்தும் விதத்தில் சிறப்பாக பந்துவீசினார் குல்தீப். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் குல்தீப்பை எடுத்திருந்த போதிலும் முதல் மூன்று போட்டிகளில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 2-1 என இந்த தொடரை இந்திய அணி வென்றது. சிட்னியில் நடந்த போட்டியில் மழையால் போட்டி டிரா ஆனதால் இந்திய அணி 2-1 என வென்றது. இல்லையென்றால் சிட்னி போட்டியிலும் வென்று 3-1 என இந்திய அணி தொடரை வென்றிருக்கும்.

சிட்னி போட்டியில் முதல் இன்னிங்ஸில் 622 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை சரித்தார் குல்தீப் யாதவ். குல்தீப்பின் சுழலில் சிக்கி சின்னாபின்னாமான ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸை இழந்தது. இந்திய அணியின் சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தன்னை அணியில் எடுத்ததை நியாயப்படுத்தும் விதத்தில் சிறப்பாக பந்துவீசினார் குல்தீப். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் குல்தீப்பை எடுத்திருந்த போதிலும் முதல் மூன்று போட்டிகளில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் அணியின் அனுபவ ஸ்பின்னரான அஷ்வின் ஆடினார். அதனால் குல்தீப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. 

முதல் போட்டியில் அஷ்வின் காயமடைந்த நிலையில், பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஸ்பின் பவுலரே இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி படுதோல்வியடைந்தது. பின்னர் மெல்போர்னில் நடந்த போட்டியில் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார். கடைசி போட்டி சிட்னியில் நடந்த நிலையில், சிட்னி மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஜடேஜாவுடன் சேர்த்து சைனாமேன் குல்தீப்பிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய குல்தீப், அருமையாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தான் மிகச்சிறந்த ஸ்பின்னர் என நிரூபித்துவிட்ட குல்தீப், தற்போது ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டிக்கும் தான் தகுதியான பவுலர் என்பதை உரக்க சொல்லியுள்ளார். 

டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், குல்தீப்பை புகழ்ந்து பேசியுள்ளார். குல்தீப் குறித்து பேசிய பரத் அருண், குல்தீப் மிகவும் திறமை வாய்ந்த பவுலர். ஒருநாள் போட்டிகளில் அவர் அருமையாக வீசி தனது திறமையை நிரூபித்துள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பவுலர். குல்தீப் கிரீஸை பயன்படுத்தும் முறைதான் அவரை மற்ற பவுலர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. ஓவர் தி விக்கெட் மற்றும் அரௌண்ட் தி விக்கெட் என ஸ்டம்பின் இரண்டு பக்கமிருந்தும் அருமையாக வீசுகிறார். குல்தீப்பிற்கு இங்கிலாந்து தொடர் வெற்றிகரமானதாக அமையவில்லை. ஆனால் சிட்னி போட்டியில் அருமையாக வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது, அவருக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என பரத் அருண் தெரிவித்தார்.
 

click me!