உலக செஸ் அரங்கில் இந்தியா தான் 'கிங்'; அன்று குகேஷ்; இன்று கொனேரு ஹம்பி; குவியும் வாழ்த்து!

By Rayar r  |  First Published Dec 29, 2024, 4:32 PM IST

உலக மகளிர் ரேபிட் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


கொனேரு ஹம்பி சாம்பியன் 

உலக மகளிர் ரேபிட் செஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ஐரீன் சுகந்தரும், இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பியும் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் அதிவேகமாக, சாதுர்யமாக காய்களை நகர்த்திய கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 

Tap to resize

Latest Videos

மொத்தம் 11 சுற்றுகளுடன் நடைபெற்ற போட்டியில் 8.5 புள்ளிகளை பெற்ற கொனேரு ஹம்பி சாம்பியன் மகுடத்தை கையில் ஏந்தியுள்ளார். 37 வயதான கொனேரு ஹம்பி ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு அவர்  2019ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக ரேபிட்  செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

உலக ரேபிட் செஸ் போட்டி என்பது என்ன?

உலக ரேபிட் செஸ் போட்டி என்பது அதிவேகமாக விளையாடக்கூடிய போட்டியாகும். மற்ற செஸ் போட்டிகளை விட இந்த போட்டிகளுக்கு குறைவான நேரமே ஒதுக்கப்படும். அந்த நேரத்துக்குள் மிக விரைவாகவும், மிக சாதுர்யமாகவும் காய்களை நகர்த்தி வெற்றி பெற வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு 15 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் 10 வினாடிகள் கூடுதலாக நேரம் ஒதுக்கப்படும் என்பதால் மின்னல் வேகத்தில் சாதுர்யமாக காய்களை நகர்த்துபவர்களே வெற்றி பெற முடியும்.

யார் இந்த கொனேரு ஹம்பி?

உலக சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்த கொனேரு ஹம்பி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா என்ற பகுதியை சேர்ந்தவர். சிறு வயதிலேயே இவருக்கு செஸ் மீது அதிக ஆர்வம் இருந்ததால் இவரது பெற்றோர்கள் மகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்கள். தொடர் பயிற்சி மற்றும் திறமையின் காரணமாக 2002ஆம் ஆண்டு தனது 15 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார் கொனேரு ஹம்பி.

கொனேரு ஹம்பி செஸ் போட்டியில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ரேபிட் செஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அவர்  இந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா தான் 'கிங்'

அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். தற்போது உலக மகளிர் ரேபிட் செஸ் போட்டியில் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் உலக செஸ் அரங்கில் நாங்கள் தான் 'கிங்' என இந்தியா நிரூபித்துள்ளது.

click me!