வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி 20 போட்டி !! 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி !!

By Selvanayagam PFirst Published Nov 4, 2018, 10:58 PM IST
Highlights

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.


 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 1-3 என்ற கணக்கிலும் பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்றது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சைத் தெர்வு செய்தார். இந்திய அணியில் குருணால் பாண்டியா, கலீல் அஹமது ஆகியோர் அறிமுகமானார்கள். புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில், ஷாய் ஹோப், ராம்தின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய பந்துவீச்சாளர்களின் நெருக்கடியை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பெபின் ஆலன் 27(20) ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணிக்கு 110 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 6 ரன்களும், ஷிகார் தவான் 3 ரன்களும், ரிஷாப் பாண்ட் 1 ரன்னும், லோகேஷ் ராகுல் 16 ரன்களும்  எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஜோடி அணியின் ரன்ரேட்டை மெதுவாக உயர்த்தினர். அப்போது மணிஷ் பாண்டே19(24) ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆனார்.

இறுதியில் தினேஷ் கார்த்திக் 31ரன்களும், கர்னால் பாண்ட்யா 21ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 17.5 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் தாமஸ், பிரித்வொய்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

click me!