அடுத்த சச்சினாவோ, சேவாக்காவோ ஆக தேவையில்ல!! தெறிக்கவிட்ட முரளி கார்த்திக்

By karthikeyan VFirst Published Nov 4, 2018, 5:29 PM IST
Highlights

பிரித்வி ஷா நல்ல வீரர் தான். இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே எந்த முன்னாள் வீரர்களுடனும் ஒப்பிட வேண்டாம் என்று கங்குலி, அசாருதீன் ஆகிய முன்னாள் கேப்டன்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா குறித்து முன்னாள் வீரர் முரளி கார்த்திக் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, அபாரமாக ஆடி அறிமுக போட்டியிலேயே சதமடித்தார். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் குவித்து, அவசரப்பட்டு சதமடிக்க முடியாமல் அவுட்டானார். இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அறிமுக போட்டியிலேயே சற்றும் பயமோ பதற்றமோ இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார். பயமில்லாத இயல்பான அவரது ஆட்டம்தான் அவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது. அறிமுகமான முதல் தொடரிலேயே தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பிரித்வியின் நேர்த்தியான பேட்டிங், கால் நகர்த்தல்கள், நிதானம் என அவரது பேட்டிங் திறன்கள் ஜாம்பவான்களை கவர்ந்திழுத்துள்ளது. குறிப்பாக பேக் ஃபூட் ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடுகிறார். பிரித்வி ஷாவை கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சேவாக், லாரா ஆகியோருடன் ஒப்பிடுகின்றனர். பிரித்வி, சச்சின் மற்றும் லாராவின் கலவை என சிலரும் சச்சின் மற்றும் சேவாக்கின் கலவை வேறு சிலரும் புகழ்ந்து தள்ளுகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இவர்தான் என்று புகழப்படுகிறார். 

பிரித்வி ஷாவை அடுத்த சச்சின் என்றும் அடுத்த சேவாக் என்றும் புகழ்கின்றனர். பயமே இல்லாமல் பந்தை பார்த்து அடித்து ஆடுவதால் சேவாக்குடனும் அவரது உயரம் மற்றும் உருவம் ஆகியவை சச்சினை நினைவுபடுத்துவதால் சச்சினுடனும் ஒப்பிட்டு, பிரித்வியை அடுத்த சச்சின் என்றும் அடுத்த சேவாக் என்றும் புகழ்கின்றனர். 

ஆனால் அபாரமான திறமையை பெற்றிருக்கும் பிரித்வி ஷா நல்ல வீரர் தான். இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே எந்த முன்னாள் வீரர்களுடனும் ஒப்பிட வேண்டாம் என்று கங்குலி, அசாருதீன் ஆகிய முன்னாள் கேப்டன்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரித்வி ஷா இடம்பெற்றிருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக்கும் அதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளார். பிரித்வி ஷா, அடுத்த சச்சினாகவோ அடுத்த சேவாக்காகவோ இருக்க தேவையில்லை. அவர் அவராக இருந்து அவருக்கென தனி இடத்தை பிடிப்பார். அதற்கான தகுதி அவரிடம் இருக்கிறது என்று முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.

click me!