hardik: ஹர்திக் பாண்டியாவால் தொடர்ந்து வீச முடியுமா? இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கேள்வி

By Pothy RajFirst Published Jun 3, 2022, 12:38 PM IST
Highlights

Hardik Pandya bowling 4 overs now, but not sure for how long: Ex-India captain: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவால் எவ்வளவு நாட்கள் 4 ஓவர்கள் வரை பந்துவீச முடியும் என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவால் எவ்வளவு நாட்கள் 4 ஓவர்கள் வரை பந்துவீச முடியும் என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரில் குஜராத் டைட்டனஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இவரின் தலைமையில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது. இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், இதில் பல போட்டிகளில் ஹர்திக் பாண்டியா பந்துவீசினார்.

கடந்த 2019ம் ஆண்டு காயத்தால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் பல போட்டிகளில் ஆடவில்லை. அப்படியே அணியில் இடம் பெற்றாலும் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்தார். இதேநிலைதான் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ஹர்திக் பாண்டியா இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் பந்துவீசாமல் பேட்டிங் மட்டும் செய்த ஹர்திக் பாண்டியா, டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் பந்துவீசாமல் பேட்டிங் மட்டுமே செய்தார். 

ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் டி20 சீசனில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அதன்பின், அவர் பந்துவீசத் தொடங்கினார். பல போட்டிகளில் ஹர்திக் பாண்டியா மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசியுள்ளார். 
இந்நிலையில் இதே உடல்நிலையுடன் ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிவரை தொடர்ந்தால், நிச்சயம் திருப்புமுனை வீரராக வலம் வருவார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், ஹர்திக் பாண்டியாவின் உடல்தகுதி, உடல்நிலை எத்தனை நாட்களுக்கு அவரால் தொடர்ந்து 4 ஓவர்கள் வீச ஒத்துழைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கலீஜ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ ஹர்திக் பாண்டியாவுக்கு பந்துவீசும் திறமை இருக்கிறது. இந்திய அணிக்கு பல போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார்.

ஆனால் காயம் காரணமாகத்தான் பல போட்டிகளில் அவரால் ஆடமுடியாமல் போனது. இப்போது காயத்திலிருந்து பாண்டியா திரும்பிவந்துள்ளார். டி20 போட்டியில் 4 ஓவர்கள் வரை வீசுகிறார். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை, உடற்தகுதி ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் அவரால் எத்தனை போட்டிகளுக்கு 4 ஓவர்களை வீச முடியும் என்பது தெரியாது.

ஆல்ரவுண்டராக இருக்கும் பாண்டியா நிச்சயமாக பந்துவீச வேண்டும் என்பதுதான் விருப்பம். ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு ஆட்டத்தையே மாற்றிவிட்டது. 4 ஓவர்களில் 3விக்கெட்டுகளை வீழ்த்தி பாண்டியா சிறப்பாகப் பந்துவீசினார். பேட்டிங்கிலும் விரைவாக 34 ரன்கள் சேர்த்தார். திறமையான வீரர், ஆனால், நிலைத்தன்மை மட்டும் சிறிது தேவைப்படுகிறது

இவ்வாறு அசாருதீன் தெரிவி்த்தார்
 

click me!