
இந்தியா மற்றும் அமெரிக்கா வீரர்களுக்கு இடையேயான 'செக்மேட்' கண்காட்சி செஸ் போட்டி அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இந்த போட்டியில் உலக செஸ் சாம்பியனான இந்தியாவை சேர்ந்த டி.குகேஷை, உலக தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஹிகாரு நகமுரா 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
குகேஷை வீழ்த்திய கொண்டாட்டத்தில் திளைத்த ஹிகாரு நகமுரா, குகேஷின் செஸ் போர்டில் இருந்த 'ராஜா' காயை எடுத்து ரசிகர்களை நோக்கி ஆவேசமாக தூக்கி எறிந்தார். ஹிகாரு நகமுராவின் இந்த செயலால் குகேஷும், நடுவரும் அதிர்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியபடி இந்த திட்டமிட்ட நாடகம் நடத்தப்பட்டதாக ஹிகாரு நகமுரா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த செயலை செய்ய யார் திட்டமிட்டிருந்தாலும் அது அநாகரீகமானது. உலக சாம்பியன் குகேஷை அசிங்கப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பலரும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், அமெரிக்கா வீரர் ஹிகாரு நகமுராவை மீண்டும் எதிர்கொண்ட குகேஷ், அவரை வீழ்த்திய பிறகு செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட்டகாசமான வெற்றி
அதாவது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற 'Clutch Chess: Champions Showdown' என்ற ரேபிட் செஸ் போட்டியில், குகேஷ் மீண்டும் நகமுராவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய குகேஷ், அவரை வீழ்த்தி அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்தார். நகமுரா தோல்வியை ஒப்புக்கொண்டு கைகுலுக்க எழுந்தபோது தன்னை அசிங்கப்படுத்திய அவருக்கு குகேஷ் என்ன பதிலடி கொடுக்க போகிறார்? என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
குகேஷின் அன்பின் பதிலடி
நகமுரா எழுந்து சென்ற பிறகு குகேஷ் மிகவும் அமைதியாகவும், கனிவுடனும் செஸ் போர்டில் இருந்த அனைத்துக் காய்களையும் நிதானமாகப் பழையபடி வரிசைப்படுத்தினார். அதாவது ஒவ்வொரு காயையும் அதற்குரிய இடத்தில் அவர் பொறுமையாக வைத்தார். நகமுரா தனக்கு செய்தது போல, பதிலுக்கு எந்தவித நாடகத்தனமான செயலையும் செய்யாத குகேஷ், மிகவும் அமைதியாக நடந்து கொண்டது போட்டியை நேரில் பார்த்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்
தன்னை அசிங்கப்படுத்திய அமெரிக்கா வீரருக்கு குகேஷ் தனது அன்பின் மூலமும், அமைதியின் மூலமும் பதிலடி கொடுத்து விட்டார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் புகழந்து தள்ளி வருகின்றனர். குகேஷின் அமைதியான குணம் எந்தவொரு கொண்டாட்டத்தையும் விட சக்தி வாய்ந்தது. அவர் எல்லா வகையிலும் ஒரு உண்மையான சாம்பியன் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.