
ஒயிட்-பால் கிரிக்கெட்டில் (ஒருநாள் + டி20) அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்த கிரிக்கெட்டின் கிங் விராட் கோலியை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார். சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விராட் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சோபிக்கத் தவறிய விராட், இந்தப் போட்டியில் 81 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஷிகர் தவான் வெளியிட்ட பதிவில், "மற்றொரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துகள் விராட் கோலி. ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்! உங்கள் ஒழுக்கமும் ஸ்திரத்தன்மையும் நிகரற்றவை. அந்தத் தீப்பொறியுடன் அனைவரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்" என்று கூறியுள்ளார். இதேபோல் பலரும் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தொடரை முழுமையாக இழப்பதைத் தவிர்க்க, சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஜோடி ஆட்டமிழக்காமல் 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 305 ஒருநாள் போட்டிகளில், 293 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 57.69 சராசரியுடன் 14,250 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 51 சதங்களும் 75 அரை சதங்களும் அடங்கும். மேலும், 125 டி20 போட்டிகளில் 4,188 ரன்களையும் அவர் எடுத்துள்ளார்.
சச்சினை முந்திய விராட்
இதன் மூலம், வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட சர்வதேச கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அவர் முந்தினார். சச்சின் 18,436 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விராட் தற்போது இந்த இரு வடிவங்களிலும் சேர்த்து 18,438 ரன்களைக் கொண்டுள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி 10 ரன்கள் எடுத்திருந்தார்.
சேஸிங்கில் அதிக சதங்கள்
ஒருநாள் போட்டி ரன் சேஸிங்கில் அதிக அரை சதங்கள் (70) அடித்த வீரர் என்ற பெருமையையும் விராட் பெற்றார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் (69 அரை சதங்கள்) சாதனையை அவர் முறியடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 51 இன்னிங்ஸ்களில் விராட் அடிக்கும் 24-வது 50+ ஸ்கோர் (எட்டு சதங்கள் மற்றும் 16 அரை சதங்கள்) இதுவாகும். சச்சினும் 70 இன்னிங்ஸ்களில் 24 முறை இந்த சாதனையை செய்துள்ளார்.