போனது போகட்டும்.. அடுத்த ஆஸ்திரேலிய தொடரில் அவரை கண்டிப்பா டீம்ல எடுங்க!! கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 4, 2019, 2:52 PM IST
Highlights

இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும் இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடுகிறது இந்திய அணி.

இந்திய அணி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அதிகமாக சார்ந்துள்ளது. அவர்கள் சொதப்பும் போட்டிகளில் பெரும்பாலான சமயங்களில் மிடில் ஆர்டரும் சோபிக்க தவறிவிடுவதால் இந்திய அணி குறைந்த ஸ்கோரை அடித்து தோற்க நேரிடுகிறது. 

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அதுதான் நடந்தது. எப்போதும் டாப் ஆர்டர்களையே நம்பியிருக்க முடியாது. அவர்கள் சொதப்பும்பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடி, ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் நான்காவது போட்டியில் சொதப்பினர். ஆனால் கடைசி போட்டியிலும் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, நான்காவது போட்டியில் எதிர்கொண்ட அதே நெருக்கடியை எதிர்கொண்டது இந்திய அணி. ஆனால் கடந்த முறை செய்த தவறை இந்த முறை செய்யவில்லை. ராயுடுவும் விஜய் சங்கரும் இணைந்து அவசரப்படாமல் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி அணியை மீட்டெடுத்தனர். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான பேட்டிங், இந்திய அணிக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான பேட்டிங் இந்திய அணிக்கு கூடுதல் பலம். எனினும் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்டை களமிறக்க வேண்டும், உலக கோப்பை அணியில் ரிஷப்பை சேர்க்க வேண்டும் என்பதே முன்னாள் ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிலும் அபாரமாக ஆடினார். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். அவரது பயமற்ற துடிப்பான ஆட்டத்தின் விளைவாக, முன்னாள் வீரர்கள் பலரும் ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கவாஸ்கர், கங்குலி உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். உலக கோப்பையில் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பதால், ரிஷப் பண்ட்டை வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துவருகின்றன. கவாஸ்கர், கங்குலி, அகார்கர் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர். 

ஷிகர் தவான் ஒருவர் தான் இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன். மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனே இல்லை. ஆனால் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமுள்ள அணிக்கு எதிராக ஆடும்போது குறைந்தது 2 இடது கை பேட்ஸ்மேன்களுடன் ஆட வேண்டும். ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவரை மிடில் ஆர்டரில் இறக்கலாம். மிடில் ஆர்டரில் அவருக்கான தேவை இருக்கிறது என்பதால் அவரை உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று கவாஸ்கர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு பேசிய கவாஸ்கர், நியூசிலாந்து தொடர் முடிந்ததும் இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடுகிறது இந்திய அணி. அந்த அணியில் ரிஷப் பண்ட் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை சேர்க்கலாமா என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய கவாஸ்கர், நான் எப்போதுமே ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்றுதான் சொல்லுவேன். ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், இந்திய பேட்டிங் வரிசைக்கு அவர் வலு சேர்ப்பார். இந்தியாவில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் ஆடுவதை பார்க்க வேண்டும். அவரை 4 அல்லது 5ம் இடத்தில் களமிறக்கி அவரது பொறுப்புணர்வை அதிகரிக்க வேண்டும். 6 அல்லது 7வது வரிசையில் இறக்கினால், அவருக்கான ஸ்பேஸ் இருக்காது. முதல் 3 விக்கெட்டுகள் விரைவில் விழும் பட்சத்தில் 4 அல்லது 5ம் வரிசையில் களமிறக்கி ஒன்று, இரண்டு என பொறுமையாக ஆடி களத்தில் நிலைத்து நின்று, பின்னர் அடித்து ஆடி 80 ரன்களோ அல்லது சதமோ அடிப்பதை பார்க்க வேண்டும். மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இருக்க வேண்டியது அவசியம். எனவே அவரை ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!