அவங்க 2 பேருமே வேணாம்.. இவர ஓபனிங்ல டிரை பண்ணுங்க!! ஷாக் கொடுத்த கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Feb 4, 2019, 4:10 PM IST
Highlights

இந்திய அணியின் மாற்று தொடக்க வீரராக யாருமே எதிர்பார்த்திராத வகையில் ஒரு வீரரின் பெயரை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர்.
 

இந்திய அணியின் மாற்று தொடக்க வீரராக யாருமே எதிர்பார்த்திராத வகையில் ஒரு வீரரின் பெயரை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர்.

இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷிகர் தவான் திகழ்கின்றனர். ரோஹித் - தவான் ஜோடி சர்வதேச அளவில் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்கிறது. இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து வருகின்றனர். தொடக்க ஜோடியாக இதற்கு முந்தைய பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர். 

ரோஹித் - தவான் ஜோடி நிரந்தர தொடக்க ஜோடியாக திகழ்ந்தாலும் மாற்று தொடக்க வீரராக கேஎல் ராகுல் அணியில் இருந்தார். ஆனால் ராகுல் ஒருநாள் போட்டிகளில் அதிகம் களமிறக்கப்படுவதில்லை. டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர தொடக்க வீரராக களமிறங்கி வந்த ராகுல், கடந்த ஆண்டில் இங்கிலந்து சுற்றுப்பயணம், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் படுமோசமாக சொதப்பியதை அடுத்து, ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். 

டெஸ்ட் போட்டிகளில் ஆடினாலும் ஒருநாள் போட்டிகளிலும் ரோஹித்தும் தவானும் நிரந்தர தொடக்க வீரர்கள் என்பதால் ராகுலுக்கு ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைப்பதில்லை. எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தி கொள்வதில்லை. இங்கிலாந்து தொடரில் தனது இடத்தை ராகுலுக்கு வழங்கி மூன்றாவது வரிசையில் இறக்கிவிட்டார் கோலி. ஆனால் ராகுல் ஏமாற்றிவிட்டார். கடந்த ஆண்டில் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடிய ராகுல், மொத்தமாக 69 ரன்கள் மட்டுமே எடுத்தார். காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய ராகுல், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களை இழந்தார். சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா ஏ அணிக்காக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய ராகுல், மூன்று போட்டிகளில் ஆடி வெறும் 55 ரன்கள் மட்டுமே அடித்தார். அதில் ஒரு போட்டியில் டக் அவுட். கடைசியாக அவர் ஆடிய 12 ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். 

இவ்வாறு ராகுலின் நம்பர் மிக மோசமாக உள்ளது. ராகுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நாடு திரும்பியதால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து தொடரில் எடுக்கப்பட்டிருந்த இளம் வீரர் ஷுப்மன் கில்லும் சரியாக ஆடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பு பெற்ற ஷுப்மன் கில், நான்காவது மற்றும் ஐந்தாவது ஆகிய இரண்டு போட்டிகளிலுமே சோபிக்கவில்லை. இரண்டிலுமே சொதப்பிவிட்டார். கிடைத்த வாய்ப்பில் தேர்வாளர்களை கவரும் வகையில் கில் ஆடவில்லை. 

இந்நிலையில், உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பை அணியில் மாற்று தொடக்க வீரராக யாரை இறக்கலாம் என்பது குறித்து கவாஸ்கர் அதிரடியான தனது கருத்தை தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி முடிந்ததும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக அந்த தொடரின் வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர், இதுகுறித்து கருத்து தெரிவித்தார். 

அப்போது, ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் எடுத்து மிடில் ஆர்டரில் இறக்க வேண்டும் என்று வலியுறுத்திய கவாஸ்கர், தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்களுடன் உலக கோப்பைக்கு செல்வதாக இருந்தால், தினேஷ் கார்த்திக்கை மாற்று தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தார். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அறியப்பட்ட தினேஷ் கார்த்திக்கை, மாற்று தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று கவாஸ்கர் கூறிய ஆலோசனை, அதிர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக், சூழலுக்கு ஏற்றவாறு எந்த வரிசையிலும் இறங்கி ஆடக்கூடியவர். அதனால்கூட தினேஷ் கார்த்திக்கின் பெயரை கவாஸ்கர் பரிந்துரைத்திருக்கலாம். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் போட்டியை வெற்றிகரமாக தினேஷ் கார்த்திக் முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!