அஷ்வினும் இஷாந்த் சர்மாவும் இங்கிலாந்தில் அசத்த இதுதான் காரணம்!! கங்குலி சொன்ன தகவல்

First Published Aug 4, 2018, 12:28 PM IST
Highlights
ganguly revealed why ashwin and ishant taking more wickets in england


இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கிவிட்டது. வெற்றிக்கு இன்னும் 84 ரன்கள் மட்டுமே தேவை என்பதால், இன்று ஆட்டம் முடிந்துவிடும். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும் இந்திய அணி 274 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் விராட் கோலி தனி நபராக போராடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். 

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஏற்கனவே 13 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், இந்திய அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 194 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முரளி விஜய், தவான், ராகுல், ரஹானே, அஷ்வின் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். முதல் இன்னிங்ஸை போலவே ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று ஆடிவருகிறார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 110 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 84 ரன்களே தேவை. கோலியும் தினேஷ் கார்த்திக்கும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் சதமடித்து கடைசி விக்கெட்டாக அவுட்டான விராட் கோலி, இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிவருகிறார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, முதல் இன்னிங்ஸில் கோலி அடித்த சதம், அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. அது மிகவும் முக்கியமான சதம். இரண்டாவது இன்னிங்ஸிலும் கோலியின் மீது பொறுப்பு இறங்கியுள்ளது. மற்ற வீரர்களும் சிறப்பாக ஆடி ரன்களை குவிக்க வேண்டியது அவசியம் என கங்குலி தெரிவித்தார். 

மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா மற்றும் அஷ்வின் சிறப்பாக பந்துவீசி, இருவரும் சேர்ந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிலும் இஷாந்த் சர்மாவின் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது, ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது. 

பேட்ஸ்மேன்களின் நெருக்கடியை குறைக்கும் விதமாக குறைந்த ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை சுருட்டியதில், பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது. 

இஷாந்த் சர்மாவும் அஷ்வினும் இங்கிலாந்து பேட்டிங் வரிசையை சரித்தது எப்படி என கங்குலி விளக்கியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கங்குலி, இங்கிலாந்து அணியில் 7 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் இஷாந்த் சர்மா ஸ்டம்பிற்கு இடது புறமிருந்து அவுட் ஸ்விங் செய்வதால் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அவரால் நெருக்கடி கொடுக்க முடிகிறது. அதேபோல், இடது கை பேட்ஸ்மேன்கள் அஷ்வினின் பந்துவீச்சிலும் திணறுகின்றனர். இதுவரை இங்கிலாந்தில் அஷ்வினை போல் வேறு எந்த ஸ்பின்னரும் சிறப்பாக பந்துவீசியதில்லை என கங்குலி தெரிவித்துள்ளார்.
 

click me!