இறுதி முடிவுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை – பிசிசிஐ

First Published Dec 7, 2016, 12:13 PM IST
Highlights


தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துள்ள சூழ்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறுவதாக அட்டவணை இடப்பட்டுள்ளது குறித்து இறுதி முடிவுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார்.
மாநில முதல்வர் மறைந்துள்ள இச்சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு மேற்கொள்ளப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தமிழக முதல்வர் மறைந்தது துரதிருஷ்டவசமான சம்பவமாகும். இத்தகைய சூழ்நிலையில் சென்னையில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ள இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி குறித்து விவாதிப்பது சரியாக இருக்காது.
அந்த டெஸ்ட் போட்டி தொடர்பாக எந்தவொரு முடிவும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். அங்குள்ள (சென்னை) சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதுடன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் இருந்தும் அதுதொடர்பான தகவல்களை பெற்று வருகிறோம்.
சூழ்நிலைகளைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவு மேற்கொள்வதற்கான காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அஜய் ஷிர்கே கூறினார்.

tags
click me!