பளுதூக்குதல் போட்டியில் ஊக்கமருந்து பயன்பாடு அதிகரித்துள்ளது…

 
Published : Dec 06, 2016, 01:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
பளுதூக்குதல் போட்டியில் ஊக்கமருந்து பயன்பாடு அதிகரித்துள்ளது…

சுருக்கம்

பளுதூக்குதல் போட்டியில் ஊக்கமருந்து பயன்பாடு அதிகரித்திருப்பது, ஒலிம்பிக்கில் அந்த போட்டிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக விளையாட்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1896-ஆம் ஆண்டு முதலே ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டி இடம்பிடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக், 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் ஆகியவற்றில் பங்கேற்ற பளுதூக்குதல் வீரர்களில் 104 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பங்கேற்ற பளுதூக்குதல் வீரர்/வீராங்கனைகளிடம் இருந்து பெறப்பட்டுள்ள 1,243 மாதிரிகளில் ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டால், அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட கஜகஸ்தான் பளுதூக்குதல் வீரர் இலியா இலியினிடம் இருந்து, பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 94 கிலோ எடைப் பிரிவில் அவர் வென்ற தங்கப் பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல், லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரஷியாவின் அலெக்ஸாண்டர் இவானோவிடம் இருந்தும், வெண்கலம் வென்ற மால்டோவாவின் அனாடோலி சிரிகுவிடம் இருந்தும் பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊக்கமருந்து பயன்பாடு குறித்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (வாடா) இயக்குநர் ஆலிவர் நிக்லி கூறுகையில், "ஊக்கமருந்து பயன்பாடால் பாதிப்புக்குள்ளாகும் நிலைக்கு பளுதூக்குதல் போட்டி தள்ளப்பட்டுள்ளது.

ஹெளஸ்டனில் நடைபெற்ற 2015 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட வீரர்களின் அதிகமான எண்ணிக்கை அதை உறுதி செய்வதாக உள்ளது' என்றார்.

இதனிடையே, ரஷியா மற்றும் பல்கேரியாவைச் சேர்ந்த அதிகளவிலான வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த இரு நாடுகளும் 2016 ரியோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் பங்கேற்க சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் (ஐடபிள்யுஎஃப்) தடை விதித்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த 2008 மற்றும் 2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களின் மாதிரிகள் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படும்போது ஊக்கமருந்து பயன்பாடு உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு ஓராண்டுக்கு தடை விதிப்பது என்ற தீர்மானத்தை கடந்த ஜூன் மாதம் ஐடபிள்யுஎஃப் கொண்டு வந்துள்ளது.

2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் எந்தெந்த விளையாட்டுப் போட்டிகளை சேர்ப்பது என்பது தொடர்பான ஆய்வை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. ரியோ ஒலிம்பிக் மற்றும் அதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டிகளின் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?
ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?