வான்கடே மைதானத்தின் ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக மாறும்

First Published Dec 6, 2016, 1:00 PM IST
Highlights


இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள மும்பை வான்கடே மைதானத்தின் ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக மாறும் என்று மைதானத்தின் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது.

இதில் நடந்துமுடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டி மும்பையில் வரும் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதனிடையே, போட்டி நடைபெறவுள்ள வான்கடே மைதானத்தின் ஆடுகளம் குறித்து அந்த மைதானத்தின் நிர்வாக வட்டாரங்கள் கூறியதாவது:

வான்கடே ஆடுகளத்தில் விக்கெட் வீழ்ச்சிகள் வழக்கமான நிலையிலேயே இருக்கும். முதல் நாளில் பந்து சுழலும் வகையில் ஆடுகளம் இருக்காது. எனினும், 3-ஆவது நாளில் இருந்து ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமானதாக மாறும்.

இந்தப் போட்டிக்காக சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. டி20 உலகக் கோப்பை போட்டிகள், ரஞ்சிக் கோப்பை போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றன. சர்வதேச போட்டிகள் நடத்தும் அளவிற்கு வான்கடே ஆடுகளத்தை சிறப்பாக பராமரித்து வருகிறோம்.

இந்தியா-இங்கிலாந்து போட்டிக்காக இங்கு நடைபெற்று வந்த ரஞ்சிக் கோப்பை போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மைதானத்தை பராமரிக்க 20 நாள்கள் கிடைத்தது. எங்களைப் பொருத்த வரையில் பந்து சற்று பவுன்சாக வாய்ப்பு உள்ளது.

வழக்கமான வழிமுறைகளின்படியே மைதானத்துக்கு தண்ணீர் தெளித்து வருகிறோம். தற்போது பனிக் காலமாக இருப்பதால், குறைந்த அளவில் தண்ணீர் தெளித்து வருகிறோம். ஆடுகளத்தை பராமரிப்பது தொடர்பாக அணி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்தவொரு அறிவுறுத்தலும் வரவில்லை.

இங்கு நடைபெறவுள்ள ஆட்டம் நல்லதொரு கிரிக்கெட்டாக இருக்கும். இந்தப் போட்டிக்காக இதுவரை 60-65 சதவீத டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன என்று அந்த வட்டாரங்கள் கூறின.

tags
click me!