இங்கிலாந்து மண்ணில் தோனியின் மானத்தை வாங்கிய ரசிகர்கள்!! ஜோ ரூட் அதிர்ச்சி

First Published Jul 16, 2018, 12:23 PM IST
Highlights
fans booing dhoni for his slow batting in lords odi


தோனியை ரசிகர்கள் கிண்டல் செய்தது தனக்கு வியப்பாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணிக்கு மூன்றுவிதமான சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்தவர். கடந்த ஆண்டு கேப்டன் பதவியிலிருந்து விலகி அணியில் வீரராக ஆடிவருகிறார். 37 வயதாகிவிட்ட போதிலும் உடற்தகுதியில் சிறந்து விளங்கும் தோனி, இளம் வீரர்களுக்கு நிகராக தன்னை தற்போதும் நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.

தன் மீது விமர்சனங்கள் எழும்போதெல்லாம் தனது திறமையான பேட்டிங்கால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்துள்ளார் தோனி. அண்மையில் ஐபிஎல்லில் கூட அதிரடியாக ஆடி திறமைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் ஆட்டமும் கேப்டன்சியும் சரியில்லை என்ற விமர்சனம் எழுந்த சமயத்தில், 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

எப்போதெல்லாம் விமர்சனங்கள் எழுகிறதோ அப்போதெல்லாம் தோனி வெகுண்டெழுவது வழக்கம். உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தோனி, களத்திற்கு வந்தாலே, தோனி... தோனி... என்ற ஆர்ப்பரிப்பு அரங்கை அதிரவிடும்.

அப்படியிருக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனியின் மந்தமான ஆட்டத்தால் அதிருப்தியடைந்த ரசிகர்கள், தோனியை சத்தமிட்டது விமர்சித்தது அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

கிரிக்கெட்டின் தாய்வீடு என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், 323 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. முதல் மூன்று விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்த இந்திய அணியை கோலியும் ரெய்னாவும் மீட்டெடுத்தனர். 27 ஓவரில் 140 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது இந்திய அணி. இப்படியான இக்கட்டான சூழலில் களமிறங்கிய தோனி, 47வது ஓவர் வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் களத்தில் நின்ற தோனி, அடித்து ஆடவேயில்லை. மந்தமாக ஆடிய தோனி, வெற்றி இலக்கை விரட்ட முற்படவேயில்லை. இங்கிலாந்து பவுலிங்கை அடித்து ஆட தோனி முயற்சிக்கவே இல்லாதது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 59 பந்துகளுக்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். தோனி இப்போது அடிப்பார், இப்போது அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

தோனியின் மந்தமான ஆட்டத்தால் அதிருப்தியடைந்த ரசிகர்களில் ஒரு பகுதியினர், தோனியை சத்தமிட்டு கிண்டல் செய்து விமர்சித்தனர். இது மைதானத்தில் இருந்த மற்ற ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், தோனியை ரசிகர்கள் விமர்சித்தது பெரும் வியப்பாக இருந்தது என கருத்து தெரிவித்துள்ளார். தோனி மீதான விமர்சனம் தொடர்பாக இந்திய கேப்டன் கோலியும் கருத்து தெரிவித்திருந்தார். தோனியை விமர்சிப்பது சரியல்ல. தோனி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தால் கொண்டாடுவதும் சரியாக ஆடாதபோது விமர்சிப்பதும் சரியல்ல என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!