தனி ஒருவனாக இங்கிலாந்தை வெற்றி வாகை சூடவைத்த பட்லர்!! ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ்

First Published Jun 25, 2018, 10:06 AM IST
Highlights
england whitewashes australia in odi series


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி இங்கிலாந்து அணி அசத்தியுள்ளது. மற்ற போட்டிகளில் சர்வ சாதாரணமாக தோற்ற ஆஸ்திரேலியா கடைசி போட்டியில் போராடி தோற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றது என்பதை விட ஜோஸ் பட்லரிடம் தோற்றது என்றுதான் கூற வேண்டும். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சீனியர் வீரர்களான அவர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி திணறுவதோடு, தொடர் தோல்விகளையும் சந்தித்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 போட்டிகளிலும் தோற்று, ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. 

இந்த தொடர் முழுவதுமே இங்கிலாந்து அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. மூன்றாவது போட்டியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு 481 ரன்கள் என்ற சாதனை ஸ்கோரை அடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை 242 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவிற்கு வரலாற்று படுதோல்வியை பரிசாக வழங்கியது. நான்காவது போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறும் முனைப்போடு முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் 22 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய ஸ்டாய்னிஸ்(0), ஷான் மார்ஷ்(8), டிம் பெய்ன்(1) என வரிசையாக அவுட்டாகினர். 

15 ஓவருக்கு உள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய ஆஸ்திரேலிய அணிக்கு கேரியும் ஷார்ட்டும் ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். எனினும் கேரியும் அவுட்டாக அதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் ஷார்ட் மட்டும் நிதானமாக ஆடிவந்தார். ஆனாலும் மறுபுறம் அனைவரும் ஆட்டமிழந்தனர். ஷார்ட் மட்டும் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 34.4 ஓவரில் 205 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டானது. 

206 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து இருக்கும் ஃபார்முக்கு எளிதாக எட்டிவிடும் என்று நினைத்தால், ஆஸ்திரேலிய பவுலர்கள் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தனர். ஜேசன் ராய், பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், இயன் மோர்கன், ஜோ ரூட், மோயின் அலி என அந்த அணியில் பட்லரை தவிர மற்ற அனைவரும் வரிசையாக ஆட்டமிழந்தனர். 

114 ரன்களுக்கே இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் ஜோஸ் பட்லர் நிதானமாக ஆடி, அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். 8 விக்கெட்டு பிறகு களமிறங்கிய ரஷீத், பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை இழந்துவிடாமல் நிதானமாக ஆடினார். 

சதமடித்த பட்லர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்தை வெற்றி பெற செய்தார். பட்லர் 110 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

மற்ற போட்டிகளை போல அல்லாமல், குறைந்த ஸ்கோராக இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கு ஆஸ்திரேலிய அணி நெருக்கடி கொடுத்தது. பட்லர் விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றிருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5-0 என தோல்வியடைந்து ஒயிட் வாஷ் ஆகியுள்ளது ஆஸ்திரேலியா. 
 

click me!