ஆஸ்திரேலிய வீரர்களை இங்கிலாந்து ரசிகர்களுடன் சேர்ந்துகொண்டு கிண்டல் செய்த நியூசிலாந்து வீரர்

First Published Apr 1, 2018, 8:15 AM IST
Highlights
england fans trolls australian ball tampering


ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். அவர்களுடன் இணைந்து நியூசிலாந்து வீரர் டெய்லரும் கிண்டல் செய்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிருக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதன் எதிரொலியாக கேப்டன் பதவியை ஸ்மித்தும் துணை கேப்டன் பதவியை வார்னரும் இழந்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமெனும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்துவரும் போட்டியுடன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால், ஓராண்டில் உலக கோப்பை வர உள்ள நிலையில், கேப்டன், துணை கேப்டன், பயிற்சியாளரை இழந்து புது அணியை உருவாக்க வேண்டிய நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இதனால் அந்த அணி பெரும் நெருக்கடியில் உள்ளது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரம், ஆஸ்திரேலிய அணியின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை மீதான கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஆதரவாக கம்பீர், அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்ட இந்த பெரும் தலைகுனிவை, அந்த அணியின் பரம எதிரியான இங்கிலாந்து ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்தக் கொண்டாட்டம் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் போட்டியிலும் எதிரொலித்தது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களைப் போல் உடை அணிந்து வந்திருந்த பாரி ஆர்மி ரசிகர் குழுவினர், கையில் ‘சான்ட் பேப்பர்’(பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்த பயன்படுத்தப்பட்ட அட்டை) வைத்திருந்து தங்களை அடையாளப்படுத்தினார்கள்.

ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டல் செய்தும், அவர்களின் செயலை விமர்சனம் செய்து கோஷமிட்டும் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

இதற்கிடையே மைதானத்தில் பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லரிடம் ரசிகர்கள் ‘மஞ்சள் நிற சாண்ட் பேப்பரை’ கொடுத்து ஆட்டோகிராப் கேட்டனர். அதில் ஆட்டோகிராஃப் போட்டதுடன், அவர்களுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை டெய்லர் கிண்டல் செய்துவிட்டுச் சென்றார்.

ரோஸ் டெய்லரின் இந்த செயல் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. 

click me!