பட்லர் அதிரடி.. பின்ச் பதிலடி..! ஆஸ்திரேலியாவை டி20 போட்டியிலும் வீழ்த்தியது இங்கிலாந்து.. பரிதாபமாக நாடு திரும்பும் ஆஸி.,

First Published Jun 28, 2018, 10:17 AM IST
Highlights
england defeated australia in t20 match also


இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் தோல்வியடைந்து, ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக நாடு திரும்புகிறது. 

இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடியது. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என இழந்தது. ஒருநாள் தொடரை இழந்தாலும் ஒரே ஒரு டி20 போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இங்கிலாந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா, அதிலும் தோல்வியடைந்து பரிதாபமாக நாடு திரும்புகிறது.

 

நேற்று நடந்த டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லரும் ஜேசன் ராயும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். 

அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த பட்லர், 30 பந்துகளில் 61 ரன்களை குவித்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து 44 ரன்களில் ராயும் ஆட்டமிழந்தார். இயன் மோர்கன் 15 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸும் ஜோ ரூட்டும் சிறப்பாக ஆடினர். ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அவுட்டானார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. 

222 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஆரோன் பின்ச்சை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஷார்ட்(16), மேக்ஸ்வெல்(10), டிராவிஸ் ஹெட்(15), கேரி(3), மார்கஸ் ஸ்டாய்னிஸ்(0), அகார்(29), ஆண்ட்ரூ டை(20) என சொற்ப ரன்களில் வரிசையாக அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து, தனி நபராக பின்ச் போராடி வந்தார்.

ஆனால் அவரும் 41 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அவுட்டானதால், ஆஸ்திரேலிய அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் 19.4 ஓவரில் 193 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி ஆகிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக நாடு திரும்புகிறது. 
 

click me!