கிண்டல் செய்த இங்கிலாந்து.. பதிலடி கொடுத்த ஜாகீர் கான்!! தொடர் முழுவதும் மோதல்கள்.. நினைவுகூரும் தினேஷ் கார்த்திக்

First Published Jul 29, 2018, 11:26 AM IST
Highlights
dinesh karthik reminding past test experience in england


10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விக்கெட் கீப்பிங் வாய்ப்பு சஹாவிற்கு சென்றது. 

டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ஆடிவந்தார் சஹா. கடந்த ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் குணமடையாததால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடினார்.

அதன்பிறகு சஹாவிற்கு காயம் குணமடையாததால் இங்கிலாந்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்தார். எசெக்ஸ் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் 82 ரன்கள் குவித்து அசத்தினார். 

10 ஆண்டுகளுக்கு பிறகு தினேஷ் கார்த்திக் டெஸ்ட் அணியில் ஆடுகிறார். இதுதொடர்பாக பேசிய தினேஷ் கார்த்திக், தனது மனநிலை குறித்தும் கடந்த 2007ம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்று, இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்ற அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார். 

அப்போது பேசிய தினேஷ் கார்த்திக், 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளதால் சற்று பதற்றமாகவும் அதிகமான உற்சாகமாகவும் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் டெஸ்ட் போட்டியில் ஆடுவதால் இந்த தொடரில் ஆடுவதை மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஆடுவது சவாலானது. மற்ற வீரர்களை விட நான் கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறேன். 

2007ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடர் குறித்த சில சம்பவங்கள் நன்றாக நினைவிருக்கின்றன. இரு அணிகளுக்கும் அந்த தொடர் முக்கியமானதாக இருந்தது. இரு அணிகளிலும் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படாததால் தரமான தொடராக அமைந்தது. இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதல்கள், வாக்குவாதங்கள், உரசல்கள் என தொடர் முழுவதும் பரபரப்பாக இருந்தது. 

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி டிரண்ட்பிரிட்ஜில் நடந்தது. அதில், ஜாகீர் கானை அவுட்டாக்குவதற்காக ஜெல்லி மிட்டாய்களை ஆடுகளத்தில் போட்டு இங்கிலாந்து வீரர்கள் அவரை கிண்டல் செய்தனர். அவர்களுடன் ஜாகீர் கான் வாக்குவாதம் செய்தார். பிறகு அவர்கள் இன்னிங்ஸின்போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். அந்த போட்டியில் வென்றோம்.

மூன்றாவது போட்டியில் கும்ப்ளேவின் சதத்தால் போட்டி டிரா ஆனது. தொடரை 1-0 என வென்றோம். மோதல்கள், வாக்குவாதங்கள் இருந்தாலும் அது தரமான தொடராக அமைந்தது என நினைவுகூர்ந்த தினேஷ் கார்த்திக், 10 ஆண்டுகால நினைவுகளோடு இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். 
 

click me!