’கிரிக்கெட்டுக்கு துரோகம் செய்வது கொலை செய்வதை விட பெரிய குற்றம்’... தோனி ஓபன் டாக்...

By Muthurama LingamFirst Published Mar 21, 2019, 5:28 PM IST
Highlights

‘’என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய குற்றம் என்பது கொலை குற்றமல்ல.கிரிக்கெட்டுக்கு துரோகம் செய்து, மேட்ச் பிக்ஸிங் செய்வதுதான் கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம். நான் அந்த குற்றத்தில் ஈடுபட்டு இருந்தால், அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்’ என்று 2013 மேட்ச் ஃபிக்சிங் குறித்து தனது மவுனம் கலைத்திருக்கிறார் தோனி.

‘’என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய குற்றம் என்பது கொலை குற்றமல்ல.கிரிக்கெட்டுக்கு துரோகம் செய்து, மேட்ச் பிக்ஸிங் செய்வதுதான் கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம். நான் அந்த குற்றத்தில் ஈடுபட்டு இருந்தால், அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்’ என்று 2013 மேட்ச் ஃபிக்சிங் குறித்து தனது மவுனம் கலைத்திருக்கிறார் தோனி.

’ரோர் ஆஃப் த லயன்’ என்கிற ஆவணப்படத்துக்காக மனம் திறந்து பேசிய தோனி,’’2013-ம் ஆண்டு என் வாழ்வில் மிகவும் கடினமான காலகட்டம். அப்போது என் மனம் அனுபவித்த வேதனைகளைப் போல் அதற்குமுன் நான் அனுபவித்தது இல்லை. 2007-ம் ஆண்டு நாங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் தோல்வி அடைந்து லீக் சுற்றோடு வெளியேறியபோது, அனைவரும் விமர்சித்தனர். ஏனென்றால், நாங்கள் சரியான முறையில்  கிரிக்கெட் ஆடவில்லை என்று பேசினார்கள்.

ஆனால், 2013-ம் ஆண்டு நடந்த விஷயங்கள் இதற்கு முற்றிலும் மாறானது. மக்கள் ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் குறித்து பேசத் தொடங்கினார்கள். நாட்டிலேயே மிகவும் அதிகமாக பேசப்பட்டதாக அதுதான் இருந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக வழங்கப்பட்ட தண்டனை சரிதான். ஆனால், வழங்கப்பட்ட தண்டனையின்  அளவுதான் சரியானதா என்ற கேள்வி எழுகிறது. சிஎஸ்கே அணி இரு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் நான் சந்தித்த சம்பவங்கள் பல்வேறு உணர்ச்சிகள் நிரம்பியதாக இருந்தது. ஏனென்றால், சிஎஸ்கே அணிக்காக தனிப்பட்ட முறையில் அதிகமாகச் செய்தேன், கேப்டனாகச் செய்திருந்தேன். ஆனால், நான் கேட்கும் கேள்வி எல்லாம், சிஎஸ்கே அணி என்ன தவறு செய்தது என்பதுதான். எங்கள் அணி நிர்வாகத்தினர் தரப்பிலும் தவறு இருந்தது ஆனால், நான் கேட்கிறேன், அந்த ஸ்பாட் பிக்ஸிங்கில் வீரர்கள் யாரேனும் ஈடுபட்டார்களா?, நாங்கள் என்ன தவறு செய்தோம், அந்த தண்டனை அனைவருக்கும் கிடைக்க வேண்டுமா?

ஸ்பாட் பிக்ஸிங்கில் நானும் ஈடுபட்டதாக என் பெயரும் பேசப்பட்டது. சிஎஸ்கே அணி ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும், நானும் ஈடுபட்டதாகவும் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் எல்லாம் பேசப்பட்டன, விவாதிக்கப்பட்டன. கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்ஸிங் சாத்தியமா எனக் கேட்டால், ஆம், சாத்தியம்தான். யார் வேண்டுமானாலும் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட முடியும். நடுவர்கள் ஈடுபடலாம், பேட்ஸ்மேன் ஈடுபடலாம், ஏன் பந்துவீச்சாளர்கள் கூட ஈடுபடமுடியும்.

ஆனால் ஒருவிஷயத்தை புரிந்துகொள்ளுங்கள், மேட்ச்  பிக்ஸிங் ஈடுபடுவதற்கு அணியில் பெரும்பாலான வீரர்கள் ஒத்துழைப்பு இருப்பது அவசியம்.
பிரச்சினை என்னவென்றால், என் மவுனத்தை பலரும் தவறாக அர்த்தம் புரிந்துவிட்டார்கள். நீங்கள் வலிமையானவர் என்று மக்கள் நினைக்கும் போது, அடிக்கடி உங்களிடம் வந்து யாரும் எப்படி செய்தீர்கள், எப்படி அணுகினீர்கள் என்று கேள்வி கேட்கமாட்டார்கள்.

நான்கூட மற்றவர்கள் குறித்து பேசவிரும்பவதில்லை, அதேசமயம், மற்றவர்களால் நான் பேசப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை என்னுடைய கிரிக்கெட் விளையாட்டை எதுவும் பாதிக்க நான் விடுவதில்லை. எனக்கு கிரிக்கெட் மிகவும் முக்கியமான ஒன்று. இன்று நான் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், எந்த சாதனையையும் செய்திருக்கலாம். ஆனால், அனைத்துக்கும் காரணம் கிரிக்கெட் விளையாட்டுதான். என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய குற்றம் என்பது கொலை குற்றமல்ல.கிரிக்கெட்டுக்கு துரோகம் செய்து, மேட்ச் பிக்ஸிங் செய்வதுதான் கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம். நான் அந்த குற்றத்தில் ஈடுபட்டு இருந்தால், அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.

ஒருபோட்டியின் முடிவு மிக அற்புதமாக இருந்து, போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். என் வாழ்க்கையில் இதைப் போன்ற கடினமான விஷயங்களை நான் சந்தித்ததும், எதிர்கொண்டதும் இல்லை. என் மனதில் இவ்வாறு கவலைகளையும், பிரச்சினைகளையும் மனதில் வைத்துக்கொண்டு ஒருவீரர் சிறப்பாகச் செயல்படுவது என்பது சாதாரணமான, எளிதான காரியம் அல்ல. ஆனால், சிறப்பாகத் தான் செயல்பட்டேன். எந்த கடினமான நேரத்திலும் நான் ஊடகங்களைச் சந்தித்தேன்’ என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் தோனி.

click me!