ரிஷப் பண்ட் அதிரடி.. ஜோஸ் பட்லர் பதிலடி..! டெல்லி மைதானத்தில் சிக்ஸர் மழை!! கடைசி ஓவரில் டெல்லி திரில் வெற்றி

 
Published : May 03, 2018, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
ரிஷப் பண்ட் அதிரடி.. ஜோஸ் பட்லர் பதிலடி..! டெல்லி மைதானத்தில் சிக்ஸர் மழை!! கடைசி ஓவரில் டெல்லி திரில் வெற்றி

சுருக்கம்

delhi defeats rajasthan royals

டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது.

டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால், இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் போட்டி நடந்தது. மழை பெய்ததால், போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. அதனால், போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியின் தொடக்க வீரர் கோலின் முன்ரோ, அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான பிரித்வி ஷாவுடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார்.

முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட் விழுந்தாலும், அந்த நெருக்கடியை பொருட்படுத்தாமல், பிரித்வி ஷா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்டார். 25 பந்துகளுக்கு 47 ரன்கள் குவித்த பிரித்வி ஷா, கோபாலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயருடன் மற்றொரு இளம் வீரரான ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, அதிரடியாக ஆடி ரன்களை வாரி குவித்தது. அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட்டின் ஆட்டம், பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ருத்ரதாண்டவம் ஆடினார் ரிஷப் பண்ட்.

7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 29 பந்துகளில் 69 ரன்களை குவித்து அவுட்டானார் ரிஷப் பண்ட். ஷ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

பிரித்வி ஷா, ரிஷப் பண்ட்டின் அதிரடியாலும் ஷ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான அரைசதத்தாலும் டெல்லி அணி, 17.1 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. மீண்டும் மழை பெய்ததால் 18 ஓவர்கள் முழுமையாக ஆடப்படவில்லை.

மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. இதையடுத்து போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு, ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 12 ஓவருக்கு 151 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டுவதற்காக, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லரும் ஷார்ட்டும் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, பட்லர் டெல்லி அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டார். 7 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 67 ரன்கள் குவித்து பட்லர் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து ஷார்ட்டும் அதிரடியாக ஆடி 44 ரன்கள் குவித்தார்.

ஆனால், அதன்பிறகு களமிறங்கிய சாம்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி ஆரம்பித்தது. ஆனால் கிருஷ்ணப்பா கௌதம் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

எனினும் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 9 ரன்கள் அடிக்கப்பட்டன. கடைசி பந்தில் சிக்ஸர் தேவைப்பட, வெறும் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 6வது இடத்திற்கு டெல்லி அணி முன்னேறியுள்ளது. 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!