பும்ராவுக்கு பதில் இந்திய அணியில் இடம்பிடித்த சிஎஸ்கே பவுலர்!!

First Published Jul 2, 2018, 9:49 AM IST
Highlights
deepak chahar replaced bumrah in england t20 series


இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்க உள்ளதால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இந்த தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. எனவே டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

அதே நேரத்தில், ஒருநாள் தொடரும் முக்கியமானது. ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளன. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த அணியாக திகழ்கிறது. அண்மையில் ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்து அனுப்பியது.

அதேநேரத்தில் இந்திய அணியும் கோலி, ரோஹித், தவான், ராகுல், ரெய்னா, தோனி என சிறந்த வீரர்களை கொண்ட வலுவான அணியாக திகழ்கிறது. பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், குல்தீப், சாஹல் என பவுலிங்கிலும் வலுவான அணியாகவே இந்தியா உள்ளது. 

இந்திய அணியின் தற்போதைய பவுலிங் இதுவரை இல்லாத அளவிற்கு உள்ளதாக சச்சின் டெண்டுல்கரே கருத்து தெரிவித்திருந்தார். இங்கிலாந்து தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கை கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஆடிய தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீபக் சாஹர், ஐபிஎல்லில் சென்னை அணிக்காக வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். மேலும் இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணிக்காக ஆடிவருகிறார். இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிவருகிறார். இன்று அந்த தொடரின் இறுதி போட்டி நடக்கிறது. 

ஐபிஎல் மற்றும் இந்தியா ஏ அணியில் சிறப்பாக பந்துவீசியதால், பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் வாஷிங்டன் சுந்தரும் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டி20 தொடருக்கு குருணல் பாண்டியாவும் ஒருநாள் தொடருக்கு அக்ஸர் படேலும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

click me!