6 மாசத்துக்கு மேல ஆடவேயில்ல.. ஆனாலும் அதிரடியில எந்த குறையும் இல்ல!! எதிரணியை தெறிக்கவிட்ட டிவில்லியர்ஸ்

By karthikeyan VFirst Published Nov 15, 2018, 3:46 PM IST
Highlights

திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டிவில்லியர்ஸ், பல்வேறு டி20 லீக் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 
 

திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டிவில்லியர்ஸ், பல்வேறு டி20 லீக் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

தென்னாப்பிரிக்காவை கடந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ், கடந்த மே மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அடுத்த ஆண்டு உலக கோப்பை நடக்க உள்ள நிலையில், டிவில்லியர்ஸின் அறிவிப்பு அந்த அணியினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 

தனது அபாரமான பேட்டிங் திறமையால் மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பந்தை அடித்து ஆடுவதால் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் டிவில்லியர்ஸின் ஆட்டத்தை மிஸ் செய்கின்றனர். எனினும் டி20 லீக் தொடர்களில் டிவில்லியர்ஸ் ஆடுகிறார். 

ஐபிஎல்லில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடிவருகிறார். ஐபிஎல்லுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் மசான்ஸி சூப்பர் லீக் தொடர் நாளை தொடங்க உள்ளது. 

அதற்கு முன்னதாக நடந்த பயிற்சி போட்டி ஒன்றில் டிவில்லியர்ஸ் தலைமையிலான டுஷ்வானே ஸ்பார்டான்ஸ் அணியும் ஜோஸி ஸ்டார்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் எதிரணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 31 பந்துகளில் 93 ரன்களை குவித்து வாணவேடிக்கை நிகழ்த்தினார் டிவில்லியர்ஸ். அவரது அதிரடியால் அந்த அணி 217 ரன்களை குவித்தது. 

மார்ச் மாதத்திற்கு பிறகு கிரிக்கெட்டே ஆடாத டிவில்லியர்ஸ், இந்த இடைவெளியெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது என்பதாக சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். மசான்ஸி சூப்பர் லீக் தொடரில் நாளை நடக்க உள்ள முதல் போட்டியிலேயே டிவில்லியர்ஸ் தலைமையிலான அணி ஆடுகிறது. அதனால் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 
 

click me!