கிரிக்கெட் வரலாற்றில் இன்று.. ஆரம்பமும் முடிவும் நேர்ந்த அதிசய நாள்!!

By karthikeyan VFirst Published Nov 15, 2018, 2:17 PM IST
Highlights

கிரிக்கெட் வரலாற்றில் நவம்பர் 15ம் தேதி, இந்தியா மட்டுமின்றி உலகத்தின் எந்த மூலையிலும் உள்ள கிரிக்கெட் ரசிகரால் ஒதுக்கிவிட முடியாத தினம்.
 

கிரிக்கெட் வரலாற்றில் நவம்பர் 15ம் தேதி, இந்தியா மட்டுமின்றி உலகத்தின் எந்த மூலையிலும் உள்ள கிரிக்கெட் ரசிகரால் ஒதுக்கிவிட முடியாத தினம்.

அனைத்து காலத்துக்கும் தலைசிறந்த வீரர்களில் முதன்மையானவரான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 1989ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2013 வரை 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியவர். சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலம் ஆடியவர் சச்சின் டெண்டுல்கர் தான். 

சர்வதேச அளவில் அதிக ரன்கள், அதிக சதங்கள்(100 சர்வதேச சதங்கள்) என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அசைக்க முடியாத கிரிக்கெட் ஜாம்பவான். அவரது இடத்தை வேறு எந்த வீரராலும் நிரப்பவே முடியாது.

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையில் எதார்த்தமாக அமைந்த விஷயம் ஒன்று இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதும் அவரது கடைசி இன்னிங்ஸை ஆட சென்றதும் ஒரே தினம் தான். அது இன்றைய தினமான நவம்பர் 15 தான். 

1989ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி சிறிய பையனாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சச்சின் டெண்டுல்கர். அந்த போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், வாசிம் அக்ரம், இம்ரான் கான், வக்கார் யூனிஸ் போன்ற அபாயகரமான பவுலர்களின் பந்துவீச்சை பயமின்றி எதிர்கொண்டார் சச்சின். சச்சினின் அந்த துணிச்சலான பேட்டிங் அனைவரையும் கவர்ந்தது. 

அதன்பிறகு 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி பல்வேறு சாதனைகளை வாரிக்குவித்த சச்சின் டெண்டுல்கர், 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2013ம் ஆண்டு இதே தினத்தில்தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது கடைசி இன்னிங்ஸை ஆட களத்திற்கு சென்றார் சச்சின் டெண்டுல்கர். சச்சினின் நீண்ட நெடிய கிரிக்கெட் வாழ்வில் அறிமுகமும் அஸ்தமனமும் நேர்ந்த தினம் இன்று. 

இதை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளது. அதேபோல் சச்சின் டெண்டுல்கரும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணிக்காக ஆடியது குறித்து நெகிழ்ந்துள்ளார்.
 

click me!