பொல்லார்டு பவுலிங்கை பொளந்து கட்டிய பிராவோ!! அடேங்கப்பா.. என்ன அடி..?

By karthikeyan VFirst Published Aug 17, 2018, 5:47 PM IST
Highlights

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டேரன் பிராவோவின் அதிரடி, ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 
 

வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரில் செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டேரன் பிராவோவின் அதிரடி, ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 

கீரன் பொல்லார்டு தலைமையிலான செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் மற்றும் டுவைன் பிராவோ தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில், செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

அந்த அணியின் தொடக்க வீரர் ஆண்ட்ரே ஃப்ளெட்சர் 17 ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னரும் கார்ன்வெல்லும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தனர். கார்ன்வெல் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வார்னருடன் கேப்டன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய பொல்லார்டு 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை. வார்னரும் 72 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். வார்னர், பொல்லார்டின் அதிரடியால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 213 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். மூன்றாம் வரிசையில் களமிறங்கிய கோலின் முன்ரோவும் 25 ரன்களிலேயே வெளியேறினார். 

ஆனால் அந்த அணியின் பிரண்டன் மெக்கல்லமும் டேரன் பிராவோவும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 42 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். பிரண்டன் மெக்கல்லம். எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த பிராவோ, எதிரணி கேப்டன் பொல்லார்டு வீசிய ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசினார். பொல்லார்டு வீசிய 16வது ஓவரின் முதல் நான்கு பந்துகளில் சிக்ஸர்களும் ஐந்தாவது பந்தில் 2 ரன்களும் கடைசி பந்தில் ஒரு சிக்ஸரும் விளாசினார் பிராவோ. அதன்மூலம் அந்த ஓவரில் மட்டுமே 32 ரன்கள் குவிக்கப்பட்டன. அதிரடியாக டேரன் பிராவோ, 36 பந்துகளில் 94 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

பிராவோவின் அதிரடியால் அந்த அணி 19.5 ஓவரில் 218 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது.
 

click me!