
கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன்முறையாக நடத்தப்பட்டது. அதுமுதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருந்து வருகிறார்.
மற்ற அனைத்து ஐபிஎல் அணிகளிலும் கேப்டன்கள் மாறிவிட, சென்னை அணியில் மட்டும் தான் தொடர்ச்சியாக தோனி கேப்டனாக நீடிக்கிறார். சூதாட்டப் புகார் காரணமாக இரண்டு ஆண்டுகள் சென்னை அணி விளையாடவில்லை. அந்த காலகட்டத்தை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் தோனியை சென்னை அணி தக்கவைத்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு களமிறங்கும் சென்னை அணி, இந்த முறையும் 15 கோடி ரூபாய் கொடுத்து தோனியை தக்கவைத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தோனியும், சென்னை தனது இரண்டாவது வீடு என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் முடிந்துவிட்ட நிலையில், சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
2008ம் ஆண்டு சென்னை அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் செயல்திட்ட இயக்குநராகவும் இருந்தவர் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர். இவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
முதல் ஐபிஎல் தொடரின் போது, அணி தேர்வு குறித்து அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் என்னிடம் கேட்டார். யாரை தேர்வு செய்யப்போகிறாய் என என்னிடம் கேட்டார். தோனி என நான் பதிலளித்தேன். சேவாக்கை ஏன் எடுக்கக்கூடாது என்றார்.
ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஊக்கத்தை சேவாக்கல் தரமுடியாது. ஆனால் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் திகழும் தோனியால் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். எனவே தோனியை எடுக்கலாமா என கேட்டேன். சேவாக் தான் என் சாய்ஸ் என ஸ்ரீனிவாசன் கூறிவிட்டார்.
ஆனால், மறுநாள் என்னிடம் தோனியை எடுத்துக்கொள் என கூறினார். ஒட்டுமொத்த அணிக்கும் 5 மில்லியன் டாலர் பட்ஜெட் தான் இருந்தது. தோனிக்காக ரூ. 1.1 மில்லியன் டாலர் செய்யலாம் என இருந்தோம். ஆனால் வேறு சில அணிகளும் 1.3 மில்லியன் டாலருக்கு தோனியைத் தேர்வு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. உடனே எங்கள் திட்டத்தை மாற்றியமைத்தோம். எனவே தோனிக்காக 1.4 மில்லியன் டாலர் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஆனால் ஏலத்தில் தோனிகான விலை எகிறிக்கொண்டே இருந்தது. இறுதியாக 1.5 மில்லியன் டாலருக்கு எடுத்தோம் என வி.பி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது சென்னை அணியின் அடையாளமாகவே தோனி மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.