வேண்டப்படாத வீரர்களை ஓரங்கட்டும் வியூகம்தான் யோ யோ டெஸ்ட்!! வெடிக்கும் சர்ச்சை.. அள்ளி வீசப்படும் ஆலோசனைகள்

First Published Jun 21, 2018, 11:44 AM IST
Highlights
controversies raised about yo yo test and suggestions to reform test format


யோ யோ டெஸ்ட் தொடர்பான சர்ச்சைகளும் அதன் வெளிப்படைத் தன்மை மீதான சந்தேகங்களும் வலுத்துள்ளது. 

இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் உடற்தகுதிக்கு அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிப்பதற்காக யோ யோ டெஸ்ட் நடத்தப்படுகிறது. அனுபவ வீரர்கள், சீனியர் வீரர்கள், கேப்டன் என எந்த பாரபட்சமும் இல்லாமல் இந்த டெஸ்ட் அனைத்து வீரர்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது. 

யோ யோ டெஸ்டில் தேர்வாகாத வீரர்கள், அணியில் இடம்பிடிக்க முடியாது. யோ யோ டெஸ்டில் தேர்வாகததால் இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் ஆடும் வாய்ப்பை சஞ்சு சாம்சனும், ஆஃப்கானிஸ்தானுடனான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை முகமது ஷமியும் தவறவிட்டனர். 

ஐபிஎல்லிலும் உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி, 2 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பிடித்த ராயுடு, யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில், யோ யோ டெஸ்ட் தொடர்பான சர்ச்சை வலுத்துள்ளது. உடற்தகுதி முக்கியம்தான். ஆனால் இந்த ஒரே ஒரு டெஸ்டின் மூலம் உடற்தகுதி இல்லை என்று வீரர்களை ஒதுக்குவது சரியல்ல என்ற குரல் வலுத்துள்ளது. 

யோ யோ டெஸ்ட் குறித்த அதிருப்திகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த கருத்துகளை சில முன்னாள் வீரர்களும் அணியின் உடற்பயிற்சியாளர் ஆகியோர் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

ஓராண்டு முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரரை, அரை மணி நேர உடற்தகுதி தேர்வின் மூலம் அணியிலிருந்து நீக்குவது என்ன நியாயம்? என இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு முறை அந்த தேர்வில் தோல்வியடைந்த வீரருக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் சந்தீப் பாட்டீல் வலியுறுத்தினார். 

ஹைதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஷ்ரேயாஸ் நாராயண், இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியிலிருந்து ராயுடு நீக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் ஓராண்டு முழுவதும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்த வீரர், உடற்தகுதி இல்லாமல் எப்படி ஆடியிருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும், யோ யோ டெஸ்ட் ஒருதலைபட்சமாக இருப்பதாகவும், இந்த டெஸ்ட் பொதுமக்கள் பார்வைக்கும் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

இந்திய அணி வீரர்களின் முன்னாள் உடற்பயிற்சியாளரான ராம்ஜி ஸ்ரீனிவாசனும் யோ யோ டெஸ்ட் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் அதையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

யோ யோ டெஸ்ட் தொடர்பான சர்ச்சையும் அதன் நம்பகத்தன்மை மீதான கேள்விகளும் எழுந்துள்ளதால், இதில் சில மாற்றங்களையும் திருத்தங்களையும் மேற்கொள்வதும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும் காலத்தின் தேவை. 
 

click me!