காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 7வது பதக்கத்தை வென்று கொடுத்தார் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கௌர்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. காமன்வெல்த்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடிவருகின்றனர். குறிப்பாக பளுதூக்குதலில் பதக்கங்களை குவித்துவருகின்றனர்.
பளுதூக்குதலில் மீராபாய் சானு, ஜெர்மி, அச்சிந்தா ஷூலி ஆகிய மூவரும் தங்கம் வென்றனர். சங்கேத் சர்கார், பிந்தியாராணி தேவி ஆகிய இருவரும் வெள்ளியும், குருராஜா வெண்கலமும் வென்றனர்.
இந்நிலையில், பளுதூக்குதல் மகளிர் 71 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஹர்ஜிந்தர் கௌர், ஸ்னாட்ச் பிரிவில் 93 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 119 கிலோ என மொத்த 212 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்றார். இது பளுதூக்குதலில் இந்தியாவிற்கு கிடைத்த 7வது பதக்கம் ஆகும்.
காமன்வெல்த்தில் இதுவரை இந்தியா 9 பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதல், பேட்மிண்டன், லான் பௌல்ஸ், மல்யுத்தம், தடகளம் ஆகிய விளையாட்டுகளில் இன்னும் பதக்கங்கள் கிடைக்கும்.