செஸ் ஒலிம்பியாட்: தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

By karthikeyan VFirst Published Jul 19, 2022, 2:58 PM IST
Highlights

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
 

சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்கு முன் நடந்த 43 செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்களில் ஒன்று கூட இந்தியாவில் நடந்ததில்லை. முதல் முறையாக இந்த ஆண்டுதான் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. அதுவும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடக்கிறது. 

அதனால் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரை உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு, அதற்காக தீவிர தயாரிப்புகளில் ஈடுபட்டுவருகிறது. 

Latest Videos

வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

வரும் 28ம்தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தொடங்கிவைக்கிறார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக அரசு சார்பில் அழைப்பிதழ் கொடுத்து இன்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க - 44வது செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த தமிழ்நாடு குழு

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் குறித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அரசு, தனியார் பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தான் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. அந்தவகையில், செங்கல்பட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு நகராட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த சைக்கிள் பேரணியில் மாணவ மாணவிகள், செஸ் விளையாட்டு தொடர்பான வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்து கலந்துகொண்டனர். செஸ் வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூன் ஒன்றும் பறக்கவிடப்பட்டது.

நந்திவரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. சித்தன்னவாசல் முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இந்த பேரணி நடந்தது. புதுக்கோட்டை நகராட்சி காந்தி பூங்காவில் சிறுவர்களுக்கான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.  மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இதையும் படிங்க - உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் மைராஜ் அகமது கான் தங்கம் வென்று வரலாற்று சாதனை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில், செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டன.

காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

மதுரை:

செஸ் ஒலிம்பியாட் டார்ச் வரும் 25ம் தேதி மதுரைக்கு வருகிறது. மதுரையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுரையை சேர்ந்த 23வது கிராண்ட் மாஸ்டர் தீபன் சக்கரவர்த்தி சிறுவயது செஸ் பிளேயர்களுடன் விளையாடினார். மாவட்ட ஆட்சியர், ஆணையர் ஆகியோரும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்பில் விழிப்புணர்வு ரங்கோலிகள் வரையப்பட்டன. மாவட்ட ஆட்சியர் வர்கீஸ் செஸ் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் சிவகங்கை, வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
 

click me!