7வது முறையாக ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கே..! பரபரப்பிற்கு பஞ்சமில்லாத ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி

First Published May 23, 2018, 9:42 AM IST
Highlights
chennai defeats hyderabad and qualified for final


ஐபிஎல் 11வது சீசனின் இறுதி போட்டிக்கு சென்னை அணி தகுதி பெற்றுவிட்டது. முதல் தகுதி சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் 7வது முறையாக சென்னை அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றன. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான முதல் தகுதி சுற்று போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. 

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தார் சாஹர். ஆட்டத்தின் முதல் பந்தில் ஷிகர் தவான் போல்டானார். அதன்பிறகு கோஸ்வாமி, கேன் வில்லியம்சன், ஷாகிப் அல் ஹாசன், மனீஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். 

15 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 88 ரன்களை மட்டுமே ஹைதராபாத் அணி எடுத்திருந்தது. கடைசி ஓவர்களில் கார்லோஸ் பிராத்வைட் அதிரடியாக ஆடி ஹைதராபாத் அணி, ஓரளவிற்கு நல்ல ரன்களை எடுக்க உதவினார். 29 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்தார் பிராத்வைட். இவரது அதிரடியால், ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. 

140 ரன்கள் என்பது அனுபவ பேட்டிங் வரிசையை கொண்ட சென்னை அணிக்கு குறைவானதுதான் என்றாலும், அதற்குள் சென்னையை சுருட்ட ஹைதராபாத் அணி முயன்றது. 

தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன் மற்றும் டுபிளெசிஸ் களமிறங்கினர். ஷேன் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். சுரேஷ் ரெய்னா, 22 ரன்களில் அவுட்டானார். ராயுடு, முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதன்பிறகு களமிறங்கிய தோனி, பிராவோ, ஜடேஜா ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.

தீபக் சாஹர் 10 ரன்களிலும் ஹர்பஜன் 2 ரன்னிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் டுபிளெசிஸ் மட்டும் நிதானமாக ஆடி, இலக்கை நோக்கி பயணித்தார். அரைசதமும் கடந்தார். 15 ஓவருக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை அணி. ஹர்பஜனும் அவுட்டாகிய பிறகு தாகூர் பேட்டிங் ஆட வந்தார்.

தாகூர் சந்தித்த 5 பந்துகளில் 3 பவுண்டரிகளை விரட்டி மிரட்டினார். டுபிளெசிஸும் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆட, 19.1 ஓவரில் இலக்கை எட்டி சென்னை அணி வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய டுபிளெசிஸ், 42 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

இதையடுத்து சென்னை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இது 7வது முறையாகும். வேறு எந்த அணிகளும் 7 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. 2008, 2010, 2011, 2012, 2013, 2015 ஆகிய 6 சீசன்களில் சென்னை அணி இறுதி போட்டியில் ஆடியுள்ளது. அதில், 2010 மற்றும் 2011ல் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. 2016 மற்றும் 2017ல் ஆகிய இரண்டு சீசன்களில் ஆட சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, 7வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!