ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மெல்போர்ன் டெஸ்ட்டில் கபில்தேவின் 2 சாதனைகளை முறியடிக்க பும்ராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது
தனியொரு நபராக அசத்தி வரும் பும்ரா
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்து விட்டன. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் அடிலெய்டில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியாவுக்காக தனியொரு நபராக அசத்தி வரும் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் இரண்டு முறை 5 விக்கெட் உள்ப்ட மொத்தம் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இன்னும் 6 விக்கெட் தேவை
மெல்போர்ன் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற பும்ராவின் பங்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் நிலையில், இந்த டெஸ்ட்டில் முன்னாள் கேப்டன் கபில்தேவ்வின் இரண்டு சாதனைகளை முறியடிக்க பும்ராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பும்ரா இன்னும் 6 விக்கெட் வீழ்த்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பெறுவார்.
43 டெஸ்டில் 194 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ராவுக்கு 200 விக்கெட்களை எட்ட இன்னும் 6 விக்கெட்கள் தான் தேவை. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் 50 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களை எட்டியிருந்தார். கபில்தேவின் இந்த சாதனையை பும்ரா அடுத்த டெஸ்ட்டிலேயே எட்டி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கபில்தேவின் 2 சாதனை
அதிவேகமாக 200 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் (37 டெஸ்ட்), ரவீந்திர ஜடேஜா (44 டெஸ்ட்), ஹர்பஜன் சிங் (46 டெஸ்ட்), அனில் கும்பிளே (47 டெஸ்ட்), பி.எஸ் சந்திரசேகர் (48 டெஸ்ட்) என ஸ்பின் பவுலர்களே முதல் 5 இடத்தில் இருக்கும் நிலையில், பும்ரா அடுத்த டெஸ்ட்டில் 6 விக்கெட் வீழ்த்தினால் 44 டெஸ்ட்டில் 200 விக்கெட் வீழ்த்திய ஜடேஜாவின் சாதனையை சமன் செய்வது மட்டுமின்றி, 50 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்திய கபில்தேவின் சாதனையையும் தகர்த்து விடுவார்.
இந்த தொடரில் இதுவரை 21 விக்கெட் வீழ்த்தியுள்ள பும்ரா, இன்னும் 5 விக்கெட் வீழ்த்தினால் இருதரப்பு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். கபில்தேவ் 1991ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 25 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பும்ரா இன்னும் 5 விக்கெட் சாய்த்தால் இந்த சாதனையையும் தகர்த்து விடுவார்.