மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ‘பி.சி.சி.ஐ’ நிதி வழங்க தடை - உச்ச நீதிமன்றம்

First Published Oct 8, 2016, 8:01 AM IST
Highlights


மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வழங்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து பிசிசிஐயின் நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் முன்னாள் நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.  

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பரிந்துரைகளை செயல்படுத்தாமல், சீர்திருத்த நடவடிக்கைகளை முடக்கி வைத்திருப்பதாக பிசிசிஐ மீது லோதா குழு கடந்த சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. 

இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்த பிசிசிஐ,

லோதா குழு பரிந்துரைகளின்படி செயல்பட தவறிவிட்டதாக கூறப்படுவது தவறானது என தெரிவித்துள்ளது.

லோதா கமிட்டி குற்றச்சாட்டில் உண்மையில்லை லோதா கமிட்டி அனுப்பிய மெயிலுக்கு பதில் அனுப்பவில்லை என்பதில் உண்மையில்லை” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி எஸ் தாகூர் தலைமையிலான அமர்வு,

லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முடியுமா, முடியாதா என்பது குறித்து பிசிசிஐ தெரிவிக்க வேண்டும் என்றும், மறுத்தால் பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,

மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ நிதி வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.  லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்றால் மட்டுமே, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ நிதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர், லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்பது தொடர்பாக, தனிப்பட்ட முறையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.  தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

click me!