பிசிசிஐ தலைவருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

First Published Dec 16, 2016, 1:02 PM IST
Highlights


நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் அனுராக் தாக்குருக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐ-யில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க லோதா குழுவை அமைத்தது. இதில் லோதா குழு அளித்த பெரும்பாலான பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அதனை அமல்படுத்த வேண்டுமென்று பிசிசிஐ-க்கு உத்தரவிட்டது. ஆனால், அதனை நிறைவேற்ற பிசிசிஐ தயக்கம் காட்டி வந்தது.

இந்நிலையில், பிசிசிஐ-யின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) பிரதிநிதியை நியமிக்க வேண்டுமென்ற லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்தவும் உச்ச நீதிமன்றம் பிசிசிஐ தலைவருக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அனுராக் தாக்குர் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், பிசிசிஐ-யில் சிஏஜி பிரதிநிதியை நியமிப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) அனுமதிக் கடிதம் பெற வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனிடையே, பிசிசிஐ-யில் அரசுத் தரப்பு (சிஏஜி பிரதிநிதி) தலையிட்டால் ஐசிசி-யின் அங்கீகாரத்தை பிசிசிஐ இழக்க நேரிடும் என்ற ஐசிசி தலைவரிடம் இருந்து கடிதம் பெற அனுராக் தாக்குர் முயன்றார். இதன் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருக்க அவர் நடவடிக்கை மேற்கொள்கிறார் என்று தகவல் வெளிப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அனுராக் தாக்குருக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துக் கூறியதாவது:
நீங்கள் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பொய்யான ஆவணங்களைப் பெற முயற்சித்தற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் பொய் ஆவணங்கள் தயாரித்தது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது ஆகியவற்றுக்காக சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

நீதிமன்ற உத்தரவில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அதைவிட்டுவிட்டு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருக்க குறுக்கு வழிகளைக் கையாண்டுள்ளீர்கள். நாங்கள் (நீதிபதிகள்) ஒரு உத்தரவு பிறப்பித்தால் சிறைக்கு செல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இருக்காது. ஐசிசி-யில் இருந்து நீங்கள் கடிதம் கேட்டுள்ளீர்கள் என்பது அவர்கள் மூலமே தெரியவந்துவிட்டது. பிசிசிஐ நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்தோம். அதற்கு எதிராக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்றால் உங்கள் நோக்கம் என்ன? என்று நீதிபதிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பினர்.

tags
click me!