எதை பற்றியும் எங்களுக்கு கவலையில்ல.. களத்துல பாருங்க நாங்க என்ன பண்றோம்னு!! ஆஸ்திரேலிய கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 29, 2018, 11:36 AM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடர். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக திகழ்ந்தாலும் தொடர்ந்து வெளிநாடுகளில் தோல்வியை தழுவிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளது. 
 

ஆஸ்திரேலிய அணி அமைதியாக ஆடாமல், நம் ரத்தத்தில் கலந்துள்ள ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் டிம் பெய்ன் பதிலடி கொடுத்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடர். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக திகழ்ந்தாலும் தொடர்ந்து வெளிநாடுகளில் தோல்வியை தழுவிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் சிதைந்து போயிருக்கும் ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. எனவே தொடர் தோல்விகளிலிருந்தும் சரிவிலிருந்தும் மீண்டு இந்திய அணியை வீழ்த்தி மீண்டும் பலம்பெறும் முனைப்பில் உள்ளது. 

இப்படியாக இரு அணிகளுக்குமே இந்த தொடர் மிக முக்கியம் என்பதால் இரு அணிகளுமே வெற்றி பெறும் தீவிரத்தில் உள்ளன. இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியை மறுகட்டமைக்கும் பணியில் அந்த அணி ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் அடையாளமாக திகழும் ஸ்லெட்ஜிங்கை மிகத்தீவிரமாக கையாளாமல் தற்போது அடக்கி வாசிக்கின்றனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதோடு, அந்த அணியின் மீதான நம்பகத்தன்மையும் மரியாதையையும் சிதைத்தது. அதனால் மீண்டும் நம்பகத்தன்மையையும் அணி மீதான மரியாதையையும் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.

அதனால் முன்புபோல் இப்போதெல்லாம் எதிரணி வீரர்களை பெரியளவில் ஸ்லெட்ஜிங் செய்வதில்லை. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், மற்ற அணிகளுக்கு நம்மை பிடிக்க வேண்டும் என்று கவலைப்படுவதை விடுத்து, அனைவரும் மதிக்க வேண்டும் என்பதை பற்றியே ஆஸ்திரேலிய அணி கவலைப்பட வேண்டும். ஆக்ரோஷமாக ஆடுவது என்பது ஆஸ்திரேலிய அணியின் பாணி; அதுதான் நம் ரத்தத்தில் கலந்தது என்பதால் அப்படித்தான் ஆஸ்திரேலிய அணி ஆடவேண்டும். அப்படி ஆடினால்தான் வெற்றி பெற முடியும் என அதிரடியாக தெரிவித்திருந்தார். 

மைக்கேல் கிளார்க்கின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் டிம் பெய்ன், எதிரணியினர் நம்மை விரும்ப வேண்டுமென்று நாம் நினைக்கவில்லை, அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை. மாறாக ஆஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை பெறுவது பற்றித்தான் பேசினோம். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை மக்களும் ரசிகர்களும் விரும்ப வேண்டும். கட்டுப்பாட்டுடன் அதேநேரத்தில் ஆஸ்திரேலிய பாணி கிரிக்கெட்டைத்தான் ஆடப்போகிறோம். ஸ்டார்க், கமின்ஸ், ஹேசில்வுட் போன்ற மூத்த வீரர்களும் டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ் போன்ற இளம் வீரர்களும் அணியில் உள்ளதால் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கிடைத்துள்ளது. தன்னம்பிக்கையுடன் கூடிய ஆக்ரோஷ கிரிக்கெட்டைத்தான் நிச்சயம் ஆடுவோம். 

முன்பெல்லாம் நாம் எதிரணியினருடன் களத்தில் வார்த்தை பரிமாற்றங்களில் அதிகளவில் கவனம் செலுத்தியதால் திறமையில் சிறந்த நாம், அதில் கோட்டைவிட்டோம். அதனால் இம்முறை திறமையாக ஆடி எதிரணிக்கு டஃப் கொடுப்போம். எங்களுக்கு எதிராக ரன் குவிப்பதை கடினமாக்குவோம், எங்களுக்கு பந்துவீசுவதையும் கடினமாக்குவோம் என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன். 
 

click me!