2வது டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி!! தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Dec 18, 2018, 12:20 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனானது. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனானது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் கேப்டன் கோலி சதமடித்தும், பின்வரிசை வீரர்களை நாதன் லயன் சரித்ததால் 283 ரன்களுக்கே இந்திய அணி முதல் இன்னிங்ஸை இழந்தது. 

43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் எடுத்தது. 287 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் முதல் ஓவரிலேயே ஸ்டார்க்கின் பந்தில் கிளீன் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இவரை தொடர்ந்து புஜாராவும் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து கோலியும் முரளி விஜயும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். 

ஆனால் இந்த ஜோடியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. கோலியையும் முரளி விஜயையும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் பக்கம் போட்டியை திருப்பினார் நாதன் லயன். அதன்பிறகு ரஹானேவுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். விக்கெட்டுகள் சரிந்ததால் ஆக்ரோஷமாக அடித்து ஆடிய ரஹானே, சற்று நம்பிக்கையளித்தார். ஆனால் அவரும் ஹேசில்வுட்டின் பந்தில் அடித்து ஆட முயன்று பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஹனுமா விஹாரியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் விக்கெட்டை பறிகொடுத்துவிடாமல் நான்காம் நாளை முடித்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி.  கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்டார்க்கிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் ஹனுமா விஹாரி. இவரை தொடர்ந்து ரிஷப் பண்ட், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, இந்திய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த நாதன் லயன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!