மளமளவென சரிந்த விக்கெட்டுகள்.. தோல்வியின் விளிம்பில் இந்தியா!!

By karthikeyan VFirst Published Dec 17, 2018, 4:53 PM IST
Highlights

பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 287 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் இந்திய அணி 100 ரன்களுக்கு உள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் வென்று 2-0 என முன்னிலை வகிக்கும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று 1-1 என தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டன. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களையும் இந்திய அணி 283 ரன்களையும் எடுத்தது. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் எடுத்தது. 

287 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் முதல் ஓவரிலேயே ஸ்டார்க்கின் பந்தில் கிளீன் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இவரை தொடர்ந்து புஜாராவும் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து கோலியும் முரளி விஜயும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். 

ஆனால் இந்த ஜோடியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. கோலியையும் முரளி விஜயையும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் பக்கம் போட்டியை திருப்பினார் நாதன் லயன். அதன்பிறகு ரஹானேவுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். விக்கெட்டுகள் சரிந்ததால் ஆக்ரோஷமாக அடித்து ஆடிய ரஹானே, சற்று நம்பிக்கையளித்தார். ஆனால் அவரும் ஹேசில்வுட்டின் பந்தில் அடித்து ஆட முயன்று பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஹனுமா விஹாரியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ஹனுமா விஹாரி எந்தவித பதற்றமும் இல்லாமல் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிவருவது இந்திய அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கிறது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. ஹனுமா விஹாரி 24 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவை. கடைசி நாளில் ஆஸ்திரேலிய பவுலர்கள் பவுலிங்கில் கடும் நெருக்கடி கொடுப்பர். மேலும் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நாதன் லயனும் சுழலில் மிரட்டுவார் என்பதால் கடைசி நாளில் பேட்டிங் ஆடுவது இந்திய அணிக்கு சவாலான காரியம் தான். அதிலும் முக்கியமான பேட்ஸ்மேன்களை இழந்துவிட்ட நிலையில், ஹனுமா விஹாரி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் கைகளில்தான் போட்டி உள்ளது. தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடும். அதேநேரத்தில் போட்டி ஆஸ்திரேலியாவின் பக்கமே உள்ளதால், அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் பந்துவீசும் என்பதால் இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம்.
 

click me!