ஆஸ்திரேலியா அதிரடி தொடக்கம்..! இங்கிலாந்திடம் வாங்கிய மரண அடிக்கு பதிலடி கொடுக்குமா..?

First Published Jun 21, 2018, 7:51 PM IST
Highlights
australia first batting in fourth odi against england


தொடர் தோல்விகளிலிருந்து மீளும் முனைப்பில், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நிதானமாக ஆடி சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் இல்லாததால் அந்த அணி நொடிந்துவிட்டது. ஸ்மித்தின் நீக்கத்தை அடுத்து டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. 

மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு போட்டிகளை விட மோசமாக அமைந்தது. மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அபார சதம் மற்றும் ஜேசன் ராய் 82, கேப்டன் மோர்கன் அதிரடி 67 ஆகியவற்றால் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 481 ரன்களை குவித்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். ஒருநாள் போட்டிகளில் நினைத்து கூட பார்க்க முடியாத ஸ்கோரை இங்கிலாந்து அணி குவித்தது. 

482 ரன்கள் என்ற கடின இலக்கை எட்டமுடியாமல் 242 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியடைந்தது. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து, தொடரை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இழந்துவிட்டது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. தொடரை இழந்துவிட்டாலும் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. ஆரோன் ஃபின்ச் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

இந்த ஜோடி 19 ஓவருக்கே 100 ரன்கள் எடுத்தது. தொடக்கம் முதலே பந்துகளை வீணடிக்காமல் சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அரைசதம் கடந்த ஹெட், 63 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து ஃபின்ச்சுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 21 ஓவருக்கு அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து அணி நல்ல ஃபார்மில் இருப்பதால், மிகப்பெரிய ரன்னை இலக்காக நிர்ணயித்தால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் வழக்கம்போலவே இங்கிலாந்தே வெற்றி பெறும். ஏனெனில் அந்த அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், இயன் மோர்கன், ஜோ ரூட், மோயின் அலி என அனைவருமே நல்ல ஃபார்மில் உள்ளனர். அதனால் 350 ரன்களுக்கு உட்பட்ட இலக்கை எளிதாக அடித்துவிடக்கூடும்.
 

click me!