ஆசிய கோப்பை கால்பந்து போட்டி …. கோல் மழை பொழிந்த இந்திய அணி… தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி !!

By Selvanayagam PFirst Published Jan 7, 2019, 7:26 AM IST
Highlights

அபுதாபியில் நடைபெற்ற ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2019  தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி  4 – 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது

17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று  முன்தினம் இரவு தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 24 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, பக்ரைன் ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3–வது இடம் பெறும் அணிகளில் 4 சிறந்த அணிகள் 2–வது சுற்றுக்கு முன்னேறும். இது பிப்ரவரி 1-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.

இந்நிலையில் ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2019  தொடரின் இரண்டாவது போட்டி அபிதாபியின் அல் நாஹ்யான் மைதானத்தில் நேற்று நடைபெற்றது .  8 ஆண்டுகளுக்குப் பின் இத்தொடருக்கு இந்தியா தகுதி பெற்று விளையாடியதால்  இந்திய அணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொண்டது. 

ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாய்லாந்தின் டீராசில் டங்டா 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமநிலைக்கு கொண்டு வந்தார்.

ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் சுனில் சேதரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. அவரை தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனிருத் தபா 68-வது நிமிடத்திலும், ஜிஜி லால் பெக்லுவா 80வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில், இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

click me!