ஹீரோ ஐஎஸ்எல் போட்டிகள்… சீசன் 4 சேம்பியன் அணியை 1– 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த பெங்களூரு அணி !!

By Selvanayagam PFirst Published Oct 1, 2018, 10:46 AM IST
Highlights

பெங்களூருவில் நடைபெற்ற ஹீரோ இண்டியன் சூப்பர் லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி அணியை  பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. சென்ற சீசனில் சாம்பியனான சென்னை அணி தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹீரோ இண்டியன் சூப்பர் லீக் 2 ஆவது  போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய பெங்களூரு எஃப்சி அணியும், சென்னையின் எஃப்சி அணியும் மோதின. பெங்களூரு காண்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று மாலை சரியாக 7.30 க்கு போட்டி தொடங்கியது.

தொடக்கத்தில் பெங்களூரு அணி மிகச் சிறப்பாக விளையாடினர். பல முறை அவாகள் கோல் அடிக்க முயன்றனர்.  6 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ரஃபேல் அகஸ்டோ கீழே விழுந்து காயமடைந்தார். ஆனால் 10  நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டத்தின் போக்கு சென்னை அணியின் கைக்குள் வந்தது.

தொடர்ந்து ஆட்டத்தின் 19 ஆவது நிமிடத்திலும், 32 ஆவது நிமிடத்திலும் சென்னை அணிக்கு கோல் அடிக்க  நல்ல வாய்ப்பு கிடைத்தபோதும் அதை நழுவ விட்டது. இரண்டாவது முறை பெங்களூரு அணியின் கோல் கீப்பர், பந்தை அற்புதமாக தடுத்து கோல் விழுகாமல் காப்பாற்றினார்.

கடுமையான ஆட்டத்தின் இடையே 35 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஹார்மஞ்சோட் காப்ராவுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டிருந்தபோது 41 ஆவது நிமிடத்தில்  பெங்களூரு அணியின் மீக்கு அற்புதமாக ஆடி முதல் கோலை போட்டார்.

ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் நெல்சன் பந்தை கொண்டு சென்ற போது கோல் கீப்பர் குர்பீரீத் போஸ்ட் அருகே அதை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து சென்னை அணி கோல் போடுவதற்கு பெரும் முயற்சி எடுத்தது. இறுதியில் சென்னை அணிக்கு கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு முறையும் சென்னை அணி பந்தை கொண்டு சென்று கோல் அடிக்க முயன்றபோதெல்லாம் பெங்களூரு கீப்பர் குர்பீரீத் அதைத் தடுத்து அந்த அணிக்கு பெருமை சேர்த்தார்.

இறுதியில் சென்னை அணி கோல்  அடிக்க முடியாததால் 1- 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

click me!