
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத கோலி தலைமையிலான பெங்களூரு அணி, இந்த முறையாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. ஆனால், இந்த தொடரிலும் அது சாத்தியமில்லை என்பதுபோலவே உள்ளது அந்த அணியின் ஆட்டம்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்தும், கோலியின் மோசமான கேப்டன்சியால் பெங்களூரு அணி தோற்றது. நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் மோசமான ஃபீல்டிங்காலும், டிவில்லியர்ஸ் இல்லாததால் அதிக ரன்கள் குவிக்க முடியாததாலும் தோல்வியை தழுவியது. ஒரு அணியாக இன்னும் பெங்களூரு மேம்பட வேண்டியிருக்கிறது.
தொடர் தோல்வியால் பெங்களூரு அணியின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை, பெங்களூரு போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வர வேண்டாம் என சமூக வலைதளங்களின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளனர்.
தோனி, கோலி, ரோஹித், தவான் ஆகிய இந்திய வீரர்களின் மனைவிகள் அந்தந்த அணியின் போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு வந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். அனைவரும் வருவதை போலத்தான் அனுஷ்கா சர்மாவும் வருகிறார். கோலியை திருமணம் செய்வதற்கு முன், அவரை காதலித்துவந்த காலத்திலேயே அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் போட்டிகளை காண செல்வது வழக்கம்.
அப்போதே, கோலி சரியாக ஆடாவிட்டால், அனுஷ்கா சர்மாவை மைதானத்திற்கு வர வேண்டாம் என விமர்சித்து சிலர் பதிவிட்டு வந்தனர். திருமணத்திற்கு பின்னர் அதுபோன்ற விமர்சனங்கள் எழவில்லை. ஆனால் நடந்துவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து தோல்வியை தழுவிவருவதால் அதிருப்தியடைந்த பெங்களூரு ரசிகர்கள், சென்னை அணியுடனான போட்டிக்கு பிறகு சமூக வலைதளங்களில், அனுஷ்கா சர்மாவை மைதானத்துக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான ஒரு டுவிட்டர் பதிவில், தயவுசெய்து மைதானத்திற்கு வராதீர்கள் அனுஷ்கா. நீங்கள் கோலிக்கு ராசியற்றவர் என பதிவிடப்பட்டுள்ளது.
மற்றொருவர், ஒரு நடிகையாக உங்களை நான் ரசிக்கிறேன்.. ஆனால் தயவுசெய்து பெங்களூரு போட்டி நடக்கும் மைதானத்திற்கு வராதீர்கள். போட்டியைக் காண நீங்கள் வந்தால் தோல்விதான் கிடைக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இப்படியான ரசிகர்களின் எதிர்ப்புகள் இருந்தாலும் அனுஷ்கா சர்மா தொடர்ந்து மைதானத்துக்கு வந்து, பெங்களூரு அணியையும் கோலியையும் உற்சாகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார். நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியை காணவும் அனுஷ்கா வந்திருந்தார். ஆனால், நேற்றும் பெங்களூரு தோற்றுவிட்டது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.