சர்வதேச பனிச்சறுக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் வென்று அசத்தினார் ஆஞ்சல் தாக்குர்...

 
Published : Jan 11, 2018, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
சர்வதேச பனிச்சறுக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் வென்று அசத்தினார் ஆஞ்சல் தாக்குர்...

சுருக்கம்

Anchal Thakur who won the first medal for India in international skiing

சர்வதேச ஸ்கி (பனிச்சறுக்கு) போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் ஆஞ்சல் தாக்குர் (21) வெண்கலப் பதக்கம் வென்று சர்வதேச பனிச்சறுக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச ஸ்கி  போட்டியின் ஸ்லாலம் பந்தயப் பிரிவில் 3-வது இடம் பிடித்து பதக்கம் வென்றுள்ளார் ஆஞ்சல்.

இமாசல பிரதேச மாநிலம் மனாலியைச் சேர்ந்த ஆஞ்சல் இந்திய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான சம்மேளனத்தின் செயலர் ரோஷன் தாக்குரின் மகள்.  அவரது சகோதரர் ஹிமான்ஷுவும் பனிச்சறுக்கு வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஞ்சல், முன்னாள் இந்திய ஒலிம்பிக் வீரரான ஹீரா லாலிடம் பயிற்சி பெற்று வருகிறார். வெற்றிக்குப் பிறகு ஆஞ்சல் பேசியது.

"எனது வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். மகிழ்ச்சியில் இதை என்னால் நம்பமுடியவில்லை. இறுதியாக, பிரபல விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இணையாக மதிக்கப்படுகிறோம் என நம்புகிறேன்.

இதுவரையில் நான் பங்கேற்ற எந்தவொரு போட்டிக்கும் இந்திய அரசிடம் இருந்து உதவிகள் கிடைத்ததில்லை. நாங்களும் இந்தியாவுக்காகவே கடுமையாக உழைத்து போட்டியில் பங்கேற்கிறோம். 7-ஆம் வகுப்பில் இருந்து நான் இப்பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்று வருகிறேன்.

எனது தந்தையின் முயற்சியாலேயே இத்தகைய இடத்துக்கு வந்துள்ளேன். எனது சகோதரர் ஹிமான்ஷுவும் பனிச்சறுக்கு வீரராக இருப்பதால், அரசு உதவியும் கிடைக்காத நிலையில் இருவருக்குமாக எங்கள் தந்தை அதிகம் செலவுகள் மேற்கொண்டார்.

ஓர் ஆண்டில் அதிக காலத்துக்கு இந்தியாவில் பனிப்பொழிவு இருப்பதில்லை. இதனால், பயிற்ச்சிக்காக நாங்கள் அயல்நாடு செல்ல வேண்டியிருந்தது. அத்துடன், பனிச்சறுக்குக்கான உபகரணங்கள் வாங்க ஏறத்தாழ ரூ.4-5 லட்சம் செலவாகிறது.

எதிர்வரும் தென் கொரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற 5 பந்தயங்களில் குறைந்தபட்சம் 140 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய புள்ளிகளை என்னால் ஒரே போட்டியில் பெற இயலாது. தகுதிப்புள்ளிகளைப் பெற வரும் 21-ஆம் தேதியே கடைசி நாளாகும்.

ஐஸ்லாந்தில் நடைபெறும் போட்டியில் நானும் எனது சகோதரரும் பங்கேற்கிறோம். அதைத் தொடர்ந்து ஈரான் மற்றும் பாகிஸ்தானிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. அதற்கான நுழைவு இசைவு கிடைக்க வேண்டும்.

எனவே, தென் கொரிய ஒலிம்பிக்கில் எனக்கு வாய்ப்பு இல்லாததாக தெரியும் நிலையில், 2022-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக இலக்கு நிர்ணயித்துவிட்டேன். அதற்கு அரசு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம் என்று ஆஞ்சல் கூறினார்.

அவரது தந்தை ரோஷன் தாக்குர் கூறுகையில், 'இந்தியாவில் பனிச்சறுக்குக்கு உகந்த இடமாக குல்மார்க் மற்றும் அவ்லி ஆகியவை உள்ளன. ஆனால், அவை போட்டிகளின்போது மட்டுமே உலகத் தரத்தில் பராமரிக்கப்படுகிறது.

இதர நேரங்களில் கண்டுகொள்ளப்படுவதில்லை. பனிச்சறுக்கு போட்டிகளுக்காக ஐரோப்பியர்கள் 10 மாதங்கள் பயிற்சி எடுக்கும் நிலையில், அதிக செலவினங்கள் காரணமாக நமது வீரர்கள் அதிகபட்சம் 2 மாதங்களுக்கு மட்டுமே பயற்சி எடுக்க முடிகிறது" என்று தெரிவித்தார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா