
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் ஆட்டத்திலும் நியூஸிலாந்து அணி மழைக் குறுக்கீட்டால் டக்வொர்த் லீவிஸ் முறையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
5 ஒரு நாள், 3 டி-20 போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் நெல்சன் நகரில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது பாகிஸ்தான். தொடக்க ஆட்டக்காரர்களாக அஸார் அலி, இமாம் உல் ஹக் களமிறங்கிய வேகத்தில் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.
இதையடுத்து, பி.அஸாமும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக் கூட்டணி நிதானமாக விளையாடி, அணியின் ஸ்கோரை உயர்த்தியது. எனினும், 21.6-ஆவது ஓவரில் டாட் ஆஸ்லே ஓவரில் சௌதியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மாலிக்.
அடுத்த களம் இறங்கிய கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ஃப்ராஸ் அகமது, 3 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். மற்றொரு புறம் ஹஃபீஸ் அரை சதம் கடந்தார். எனினும், அணியின் ஸ்கோர் 127-ஆக இருந்தபோது அவர் சாண்ட்னர் பந்துவீச்சில் குப்திலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஹஃபீஸ். அப்போது, அணியின் ஸ்கோர் 127-ஆக இருந்தது.
இதையடுத்து, ஷபாப் கான் களம் இறங்கி 52 ஓட்டங்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் கூட்டணி சேர்ந்த ஃபஹீம் அஷ்ரஃப் லாக்கி ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரை அடுத்து வந்த ஹசன் அலி சிறப்பான இணையாக அமைந்தார்.
44.5-ஆவது ஓவரில் ஹசன் அலி, சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷபாப் கானும் ஆட்டமிழந்தார். பந்துவீச்சாளர்கள் முகமது அமீரும், ஆர்.ரயீஸýம் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்டிருந்த 50 ஓவர்களில் அந்த அணி 246 ஓட்டங்கள் குவித்தது.
நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை ஃபெர்குசன் வீழ்த்தினார். சௌதி, ஆஸ்லே தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட், சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 247 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக காலின் மன்றோ, மார்ட்டின் குப்தில் களம் இறங்கினர். முகமது அமீர் வீசிய பந்தில் ஃபஹீம் அஷ்ரஃபிடம் கேட்ச் கொடுத்து ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார் மன்றோ.
கேப்டன் வில்லியம்சன் 19 ஓட்டங்களில் அஷ்ரஃப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, குப்திலுடன் ராஸ் டெய்லர் கூட்டணி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அணியின் ஸ்கோர் 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 64-ஆக இருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதையடுத்து, நியூஸிலாந்துக்கு டக்வெர்த் லீவிஸ் விதிமுறைப்படி, 25 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை 23.5-ஆவது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது நியூஸிலாந்து. அதிகபட்சமாக கப்டில் 86 ஓட்டங்களும், டெய்லர் 45 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முதல் ஒரு நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால் நியூஸிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படியே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.