aiff hired astrologer :அப்போ திறமையால விளையாடலையா!இந்திய கால்பந்து அணி்க்கு ரூ.16 லட்சத்தில் ஜோதிடர் நியமனம்

By Pothy RajFirst Published Jun 23, 2022, 7:57 AM IST
Highlights

aiff hired astrologer: indian football: இந்திய கால்பந்து அணி சமீபத்தில் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் ஏராளமான வெற்றிகளைப் பெற்றது. அந்த வெற்றிக்கு வீரர்களின் திறமை காரணமா அல்லது ஜோதிடர் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

இந்திய கால்பந்து அணி சமீபத்தில் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் ஏராளமான வெற்றிகளைப் பெற்றது. அந்த வெற்றிக்கு வீரர்களின் திறமை காரணமா அல்லது ஜோதிடர் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

ஏனென்றால் இந்திய கால்பந்து அணிக்கு ரூ.16 லட்சம் ஊதியத்தில்  ஜோதிடர் ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதால்தான் இந்தக் கேள்வி எழுகிறது.

ரூ.16 லட்சம் ஊதியத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றை கால்பந்து அணி வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக நியமித்துள்ளது என்று இந்தியக் கால்பந்துசம்மேளனம் தெரிவித்துள்ளது. 

ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு சுனில்சேத்ரி தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றதற்கு ஜோதிட நிறுவனம் நியமனம் காரணம் என்று ஒருதரப்பினர் கூறுகிறார்கள். 

இந்திய கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில் “ ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டிக்காக இந்திய கால்பந்து அணி வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக ஜோதிட நிறுவனம் ஒன்றை ரூ.16 லட்சத்துக்கு நியமித்தோம். வெளிப்படையாகக் கூறினால், ஜோதிடர் நியமிக்கப்பட்டுள்ளார். வீரர்களுக்கு மனரீதியான உற்சாகத்தை அவர் அளிக்கும் கணிப்புகள், ஆலோசனைகள் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியுடன் இதுவரை 3 செஷன்களில் அந்த ஜோதிட நிறுவனம் வீரர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்துள்ளது. ஆனால், இதுபற்றி கருத்துக் கூற இந்திய கால்பந்து சம்மேளனப் பொதுச்செயலாளர் மறுத்துவிட்டார்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் தனுமோய் போஸ்,ஜோதிடர் நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் “ இந்திய கால்பந்து சம்மேளனம் செயல் முட்டாள்தனமாக இருக்கிறது. நகைப்புக்குரியதாக இருக்கிறது. இளைஞர்களுக்கு முறையான பயிற்சியில்லை, பல பெருமைக்குரிய போட்டிகளுக்கு கூட தகுதி பெறாதநிலையில் இந்திய அணி இருக்கிறது. இந்த நிலையில், அணிக்கு ஜோதிடர் நியமனம் என்பது இந்திய கால்பந்து அணியின் தோற்றத்தை இன்னும் மோசமாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டதையடுத்து, கடந்த மாதம் அணியை நிர்வகிக்க உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய கால்பந்து விளையாட்டுக்கு மந்திர, தந்திர வேலைகள் செய்வது, அதற்குரிய நபர்களை நியமிப்பது புதிதல்ல. டெல்லியைச் சேர்ந்த ஒரு கிளப், மீரட் நகரைச் சேர்ந்த ஒரு சாமியாரை நியமித்தது. அந்த லீக் ஆட்டத்தில் வென்றவுடன் சாமியாரின் ஆசிதான் வென்றது எனக் கூறப்பட்டது
 

click me!