SL vs AUS: 99 ரன்னில் அவுட்டான வார்னர்.. ஆஸி.,யை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை

By karthikeyan VFirst Published Jun 21, 2022, 11:01 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3-1 என தொடரை வென்றது. 
 

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் இலங்கை அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில், 4வது ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடந்தது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கை வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கின.

இலங்கை அணி:

நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வாண்டர்சே, மஹீஷ் தீக்‌ஷனா.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ், மேத்யூ குனெமேன், ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி டாப் 3 வீரர்களான டிக்வெல்லா(1), நிசாங்கா(13) மற்றும் குசால் மெண்டிஸ்(14) ஆகிய மூவரும் 10 ஓவர்களுக்குள்ளாகவே அணியின் ஸ்கோர் வெறும் 34 ரன்களாக இருந்தபோதே ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் அசலங்காவும் தனஞ்செயா டி சில்வாவும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி 4வது விக்கெட்டுக்கு 99 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த தனஞ்செயா டி சில்வா 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் தசுன் ஷனாகா  4 ரன்களுக்கு நடையை கட்டினார்.  வெல்லாலகே 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய அசலங்கா சதமடித்தார். 106 பந்தில் 110 ரன்கள் அடித்து 48வது ஓவரின் 4வது பந்தில் அசலங்கா ஆட்டமிழக்க, 49 ஓவரில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. அசலங்காவின் பொறுப்பான பேட்டிங்கால் தான் இலங்கை அணி 258 ரன்களையாவது அடித்தது.

259 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் 99 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். பாட் கம்மின்ஸ் 35 ரன்கள் அடித்து கடைசி வரை போராடி பார்த்தார். ஆனால் அவரும் 35 ரன்கள் அடித்து 49வது ஓவரில் ஆட்டமிழந்தார். 50ஓவரில் 254 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டாக, 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3-1 என ஒருநாள் தொடரை வென்றது.
 

click me!