மும்பைக்கு 8-வது வெற்றி; பெங்களூருக்கு 8-வது தோல்வி – செம்ம ஆட்டம்…

 
Published : May 02, 2017, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
மும்பைக்கு 8-வது வெற்றி; பெங்களூருக்கு 8-வது தோல்வி – செம்ம ஆட்டம்…

சுருக்கம்

8th win for Mumbai 8th defeat to Bangalore

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் அணி 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் இது பெங்களூருக்கு 8-ஆவது தோல்வி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலியும், மன்தீப் சிங்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மெக்லீனாகான் வீசிய முதல் ஓவரில் மன்தீப் சிங் இரு பவுண்டரிகளை விரட்டினார்.

மறுமுனையில் எச்சரிக்கையாக விளையாடிய கேப்டன் கோலி, கரண் சர்மா வீசிய 4-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாச, அதே ஓவரில் மன்தீப் சிங் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் டிராவிஸ் ஹெட் களமிறங்க, கோலி 14 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 20 ஓட்டங்கள் சேர்த்து மெக்லீனாகான் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார்.

பிறகு டிவில்லியர்ஸ், வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட, 6 ஓவர்களில் 52 ஓட்டங்களை எட்டியது பெங்களூர்.

அதனைத் தொடர்ந்து வேகம் காட்டிய டிவில்லியர்ஸ், கிருனால் பாண்டியா பந்துவீச்சில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விரட்ட, டிராவிஸ் ஹெட் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

கேதார் ஜாதவ் களமிறங்க, கிருனால் பாண்டியா வீசிய 13-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய கையோடு, பூம்ராவிடம் கேட்ச் ஆனார் டிவில்லியர்ஸ். அவர் 27 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தார்.

ஷேன் வாட்சன் 3 ஓட்டங்களில் நடையைக் கட்ட, கேதார் ஜாதவுடன் இணைந்தார் பவன் நெகி. இந்த ஜோடி அதிரடியாக ரன் சேர்க்க, பெங்களூரின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

மலிங்கா வீசிய 18-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய பவன் நெகி, பூம்ரா வீசிய அடுத்த ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். தொடர்ந்து வேகம் காட்டிய பவன் நெகி, மெக்லீனாகான் வீசிய கடைசி ஓவரில் பவுண்டரியை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 35 ஓட்டங்கள் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து கேதார் ஜாதவ் 28 ஓட்டங்களிலும், அரவிந்த் ரன் ஏதுமின்றியும் வெளியேற, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் குவித்தது பெங்களூர்.

மும்பைத் தரப்பில் மெக்லீனாகான் 3 விக்கெட்டுகளையும், கிருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய மும்பை அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே பார்த்திவ் படேலின் விக்கெட்டை இழக்க, ஜோஸ் பட்லருடன் இணைந்தார் நிதிஷ் ராணா.

அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 7.2 ஓவர்களில் 61 ஓட்டங்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் 21 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33, நிதிஷ் ராணா 27 ஓட்டங்கள் எடுத்தனர்.

கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கிரண் போலார்ட். இந்த ஜோடி 28 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது. போலார்ட் 17 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கிருனால் பாண்டியா 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.

இதையடுத்து கரண் சர்மா களமிறங்க, கடைசி 6 ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 59 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அதிரடியில் இறங்கிய ரோஹித் சர்மா, அனிகெட் செளத்ரி வீசிய 15-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாச, வாட்சன் வீசிய 17-ஆவது ஓவரில் கரண் சர்மா ஆட்டமிழந்தார்.

ஹார்திக் பாண்டியா களமிறங்க, கடைசி 3 ஓவர்களில் 30 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

செளத்ரி வீசிய 18-ஆவது ஓவரில் பாண்டியா சிக்ஸரை விளாச, அந்த ஓவரில் 12 ஓட்டங்கள் கிடைத்தன. இதனால் மும்பை அணி நெருக்கடியிலிருந்து மீண்டது.

அரவிந்த் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸரை விளாசிய ரோஹித் சர்மா, 34 பந்துகளில் அரை சதம் கண்டார். கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட, வாட்சன் வீசிய அந்த ஓவரில் பவுண்டரியை விளாசி ஆட்டத்தை முடித்தார் ரோஹித் சர்மா.

மும்பை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் குவித்து வெற்றி கண்டது.

ரோஹித் சர்மா 56 ஓட்டங்கள், பாண்டியா 14 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பெங்களூர் தரப்பில் பவன் நெகி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் மும்பைக்கும் 8-வது வெற்றியும், பெங்களூருக்கு 8-வது தோல்வியும் கிடைத்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!