22 ஆண்டுகள் ஏடிபி போட்டியை நடத்தியும் ஒற்றையர் பிரிவில் இந்தியர் ஒருவர்கூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை…

First Published Jan 10, 2017, 11:49 AM IST
Highlights


22 ஆண்டுகள் ஏடிபி போட்டியை நடத்திய பிறகும்கூட ஒற்றையர் பிரிவில் இந்தியர் ஒருவரால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை என்பது இந்தியாவில் டென்னிஸ் போட்டியின் வளர்ச்சியின்மையக் குறிக்கிறது.

இந்தியாவில் தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் ஏடிபி 250 டென்னிஸ் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டது. 1996-இல் தில்லியில் முதல்முறையாக நடைபெற்ற இந்தப் போட்டி, அதன்பிறகு சென்னைக்கு இடம் பெயர்ந்தது.

இது, "டைட்டில் ஸ்பான்சர்' அடிப்படையில் 1997 முதல் 2001 வரையில் கோல்டு பிளேக் ஓபன் என்றும், 2002 முதல் 2004 வரையில் டாடா ஓபன் என்றும் அழைக்கப்பட்டது. 2005 முதல் சென்னை ஓபன் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டி என அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) பெருமையாகக் கூறிக் கொண்டாலும், அதனால் இந்திய டென்னிஸ் வளர்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை.

சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதன் முக்கிய நோக்கமே, சம்பந்தப்பட்ட விளையாட்டை பிரபலப்படுத்துவதுதான். ஆனால் இங்கு 22 ஆண்டுகள் ஏடிபி போட்டியை நடத்திய பிறகும்கூட ஒற்றையர் பிரிவில் இந்தியர் ஒருவரால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

2009-இல் சோம்தேவ் இறுதிச்சுற்று வரை முன்னேறியதே சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில் இந்தியர் ஒருவரின் சாதனையாக இன்றளவிலும் உள்ளது. இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் 6 பட்டங்களையும், மகேஷ் பூபதி 5 பட்டங்களையும் வென்றுள்ளனர். இப்போது ரோஹன் போபண்ணா - ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சாம்பியனாகியிருக்கிறது. அதிலும், இந்த ஆண்டு இரட்டையர் பிரிவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய ஜோடிகள் யாரும் பங்கேற்கவில்லை. மற்றபடி பார்த்தால் சென்னை ஓபனில் இந்திய வீரர்கள் எதையும் சாதிக்கவில்லை.

இந்த முறை சென்னை ஓபனில் வைல்ட் கார்டு பெற்று விளையாடிய ராம்குமாரும், சாகேத் மைனேனியும் முதல் சுற்றோடு வெளியேறினார்கள். குறிப்பாக தமிழக வீரரான ராம்குமார், மிக மோசமாக தோற்றார். மற்றொரு இந்தியரான யூகி பாம்ப்ரி 2-ஆவது சுற்றில் வீழ்ந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக ராம்குமாருக்கு பக்கபலமாக இருந்த தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் துணை தலைவரான கார்த்தி ப.சிதம்பரமே, இப்போது அதிருப்தியடைந்துள்ளார்.

ராம்குமாருக்கு 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக வைல்ட் கார்டு கொடுத்துவிட்டோம். ஆனால் அவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. அடுத்த ஆண்டு அவர் தகுதிச்சுற்றின் மூலம் சென்னை ஓபனில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படலாம் என கார்த்தி தெரிவித்திருக்கிறார்.

tags
click me!