இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தற்போது ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்தது. இதில், வெஸ்லி மதேவெரே மற்றும் இன்னசெண்ட் கையா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் கையா 0 ரன்னில் முகேஷ் குமார் பந்தில் கிளீன் போல்டானார். அதன் பிறகு வந்த பிரையன் பென்னட் 5 பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுத்து ரவி பிஷ்னோய் பந்தில் கிளீன் போல்டானார். தொடக்க வீரர் வெஸ்லி மதேவெரே 3 பவுண்டரி உள்பட 21 ரன்களில் ரவி பிஷ்னோய் பந்தில் கிளீன் போல்டானார்.
கேப்டன் சிக்கந்தர் ராசா 17 ரன்னில் வெளியேற, டியான் மியார்ஸ் 23 ரன்கள் வெளியேறினார். ஜோனாதன் காம்ப்பெல் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே 5.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதன் பிறகு 50 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே கடைசி வரை விளையாடிய கிளைவ் மடாண்டே 29 ரன்கள் எடுத்துக் கொடுக்கவே ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் குவித்தது.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.