அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சகாப்வா 47 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்த ஜிம்பாப்வே அணி, சகாப்வாவின் பொறுப்பான பேட்டிங்கால் 117 ரன்கள் அடித்தது.
118 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டெர்லிங்(24) மற்றும் கெவின் ஓ பிரயன்(25) ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால் அதன்பின்னர் யாருமே சரியாக ஆடாததால் அயர்லாந்து அணியால் 20 ஓவரில் 114 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதையடுத்து 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.