#ENGvsIND அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார் ரோஹித்.. புஜாரா அதிரடி அரைசதம்

By karthikeyan VFirst Published Aug 27, 2021, 9:09 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ரோஹித் சர்மா - புஜாராவின் பொறுப்பான பேட்டிங்கால் சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா(19), ரஹானே(18) ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததன் விளைவாக, முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ்(61) மற்றும் ஹசீப் ஹமீத்(68) ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 3ம் வரிசையில் இறங்கிய டேவிட் மலானும் அருமையாக ஆடி 70 ரன்களை குவித்தார். கேப்டன் ஜோ ரூட் வழக்கம்போலவே அபாரமாக ஆடி இந்த இன்னிங்ஸிலும் சதமடித்தார். 121 ரன்கள் குவித்த ஜோ ரூட்டை பும்ரா போல்டாக்கி அனுப்பினார்.

அதன்பின்னர் இறங்கிய பேர்ஸ்டோ, பட்லர், சாம் கரன் ஆகிய வீரர்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்வரிசையில் டெயிலெண்டரான க்ரைக் ஓவர்டன் 32 ரன்கள் அடித்தார். 3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசன் தொடங்கிய சில நிமிடங்களில் இங்கிலாந்தின் கடைசி 2 விக்கெட்டுகளையும் இந்திய அணி வீழ்த்த, முதல் இன்னிங்ஸில் 432 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் 354 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் கேஎல் ராகுலும் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். இருவரும் இணைந்து முதல் செசனை முடிக்கவிருந்த நிலையில், லன்ச்சுக்கு முந்தைய கடைசி ஓவரின் கடைசி பந்தில் கேஎல் ராகுல் ஓவர்டனின் பந்தில் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த தொடர் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு இன்னிங்ஸிலும், செசன் முடிவதற்கு முந்தைய கடைசி ஓவரில் விக்கெட்டை இழப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள இந்திய அணி, இந்த போட்டியிலும் லன்ச்சுக்கு முந்தைய கடைசி ஓவரில் ராகுலின் விக்கெட்டை இழந்தது.

2வது செசனில் ரோஹித்துடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். பொதுவாக முதல் ரன் அடிக்கவே அதிக நேரமும் அதிக பந்துகளும் எடுத்துக்கொள்வார். ஆனால் இந்த இன்னிங்ஸில் களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார் புஜாரா. ரோஹித்தும் புஜாராவும் இணைந்து பொறுப்புடன் ஆடி 2வது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர்.

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 59 ரன்னில் ஆட்டமிழந்தார். புஜாராவுடன் கோலி ஜோடி சேர, புஜாராவும் அரைசதம் அடித்தார். புஜாராவும் கோலியும் ஜோடி சேர்ந்து  ஆடிவருகின்றனர்.
 

click me!