#ENGvsIND தம்பி கோலி, உடனே சச்சினுக்கு கால் பண்ணி எப்படி பேட்டிங் ஆடுறது ஐடியா கேளுங்க..! கவாஸ்கர் அட்வைஸ்

By karthikeyan V  |  First Published Aug 27, 2021, 6:51 PM IST

விராட் கோலி அவரது பேட்டிங் டெக்னிக்கில் உள்ள பிரச்னையை சரிசெய்ய உடனடியாக சச்சின் டெண்டுல்கரை தொடர்புகொண்டு ஆலோசனை செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
 


சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் ஸ்கோர் செய்யமுடியாமல் சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிவருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் மட்டும் பேட்டிங் ஆடிய விராட் கோலி, அந்த இன்னிங்ஸில் ஆண்டர்சனின் பந்தில் கோல்டன் டக் அவுட்டானார். 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 42 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 20 ரன்களும் அடித்தார். 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் மீண்டும் ஆண்டர்சனின் பந்தில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Tap to resize

Latest Videos

விராட் கோலியின் சொதப்பலான பேட்டிங் இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைகிறது; போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்திய அணியின் முக்கியமான வீரரான கோலி, பேட்டிங்கில் சொதப்பினால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

விராட் கோலி இந்த தொடரில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே அனைத்து இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்திருக்கிறார். இந்த தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமென்றால், கோலி சிறப்பாக ஆடியாக வேண்டும். கோலி சிறப்பாக ஆட வேண்டுமென்றால், அவர் செய்யும் தவறை திருத்த ஒரு ஜாம்பவானின் ஆலோசனை வேண்டும்.

எனவே விராட் கோலி உடனடியாக சச்சின் டெண்டுல்கரை தொடர்புகொண்டு பேச வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவானும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், கோலி சச்சினுக்கு ஃபோன் செய்து, என்ன செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டும். கோலி ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது ஸ்டம்ப் லைனில் செல்லும் பந்தில் எல்லாம் அவுட்டாவது எனக்கு வருத்தமளிக்கிறது. 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆஃப் ஸ்டம்ப் லைனில் தான் ஆட்டமிழந்தார். ஆனால் இப்போது வெளியே செல்லும் பந்துகளில் எல்லாம் ஆட்டமிழக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் சிட்னியில், கவர் டிரைவே ஆடாமல் எப்படி ஆடினாரோ, அதுமாதிரி கோலி ஆட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

2004 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சச்சின் டெண்டுல்கர் கவர் டிரைவ் ஆடி தொடர்ந்து அவுட்டாகி கொண்டிருந்த நிலையில், சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட்டில் கவர் டிரைவ் ஆடுவதை முற்றிலுமாக தவிர்த்தார். சதமடிக்கும் வரை கவர் டிரைவே ஆடவில்லை. தான் செய்யும் தவறை உணர்ந்து அதை திருத்தியதால் தான், அந்த குறிப்பிட்ட போட்டியில் இரட்டை சதமடித்தார். அந்த போட்டியில் 241 ரன்களை குவித்தார் சச்சின் டெண்டுல்கர். அதுமாதிரியான பேட்டிங்கை கோலி ஆடவேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!