இவங்களலாம் கூட்டிகிட்டு உலக கோப்பைக்கு போனா எப்படி வெளங்கும்..? அணி நிர்வாகத்தை கழுவி ஊற்றிய யுவராஜ் சிங்

By karthikeyan VFirst Published Dec 18, 2019, 2:32 PM IST
Highlights

2019 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 
 

இந்திய அணியிலிருந்து யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்ட பிறகு, நான்காம் வரிசை வீரருக்கான தகுதியான வீரரை தேர்வு செய்யும் பணி இரண்டு ஆண்டுகளாக நடந்தது. 

2019 உலக கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது, 4ம் வரிசை பேட்ஸ்மேனுக்கான தேடுதல் படலம். ஆனாலும் தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகத்தால் உலக கோப்பைக்கு முன்பே சரியான வீரரை கண்டறிய முடியவில்லை. 4ம் வரிசையில் ஆட தகுதியான வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் தான் சரியான வீரர்கள் என்பதை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் அடையாளம் காணவில்லை. 

மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், அம்பாதி ராயுடு உள்ளிட்ட பல வீரர்களை அந்த வரிசையில் இறக்கி பரிசோதித்த அணி நிர்வாகம், அம்பாதி ராயுடுவை நான்காம் வரிசை வீரர் என உறுதி செய்தது. ஆனால் கடைசி நேரத்தில் திடீரென  விஜய் சங்கரை நான்காம் வரிசை வீரராக உலக கோப்பை அணியில் எடுத்தது தேர்வுக்குழு. அனுபவமில்லாத விஜய் சங்கர், ரிஷப் பண்ட் ஆகியோரை அழைத்துக்கொண்டு உலக கோப்பையில் ஆட சென்றது இந்திய அணி. 

உலக கோப்பை லீக் சுற்று முழுவதும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியதால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறை அணியை பாதிக்கவில்லை. ஆனால் அரையிறுதியில் ரோஹித், ராகுல், கோலி ஆகிய மூவரும் ஏமாற்றமளித்த நிலையில், இந்திய அணியின் அனுபவமில்லாத மிடில் ஆர்டர் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை தழுவியது. 

இந்நிலையில், இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழுவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார் யுவராஜ் சிங். இதுகுறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், உலக கோப்பை அணியில் ராயுடு இல்லாதது எனக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உலக கோப்பைக்கு முந்தைய ஓராண்டாக ராயுடுதான் அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கூட 90 ரன்களோ என்னவோ அடித்தார் என நினைக்கிறேன். அந்த போட்டியில் அவர்தான் ஆட்டநாயகன். உலக கோப்பைக்கு முந்தைய ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் ஆடினார். அப்படியிருக்கையில், அவரை விட்டுவிட்டு அனுபவமில்லாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் உலக கோப்பைக்கு சென்றது, எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 

நாங்கள் 2003 உலக கோப்பையில் ஆட  சென்றபோது, அதற்கு முந்தைய தொடர்களில் ஆடிய அதே அணியுடன் தான் உலக கோப்பைக்கும் சென்றோம். உலக கோப்பைக்கு முந்தைய தொடர்களில் ஆடிய அணியில் பெரியளவில் மாற்றங்கள் செய்யவில்லை. கிட்டத்தட்ட அதே அணிதான் உலக கோப்பையில் ஆடியது. நான், கைஃப் ஆகியோர் சுமார் 40 போட்டிகளில் ஆடிய அனுபவத்தை பெற்றிருந்தோம். அப்போதைய இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நிறைய அனுபவத்தை பெற்றிருந்த சீனியர் வீரர்கள். மிடில் ஆர்டரில் நாங்கள் ஓரளவிற்கு டீசண்ட்டான அனுபவத்தை பெற்ற வீரர்களாக இருந்தோம் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். 

click me!